கோவையில் கரகாட்டத்தில் கொடிகட்டி பறந்த - அய்யாவு

 Tuesday, March 5, 2019  06:30 PM

கரகாட்டம், மயிலாட்டம், காளை மாட்டு ஆட்டம், பொய்க்கால் குதிரை என கொங்கு மண்டலத்தின் மண் சார்ந்த கலைகளை அரை நூற்றாண்டுக் காலம் சலங்கைக் கட்டி ஆடியவர் அய்யாவு. கொங்கு மண்டலத்தில் இருந்த பல கரகாட்டக் கலைஞர்களின் குருவும் இவரே. ஆனால், இப்போது இவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. புற உலகத் தொடர்புகள் அரிதாகிவிட்ட நிலையில் ஆர்.எஸ்.புரத்தில் ஒரு குடிசை வீட்டில் தனியாக வசிக்கிறார் அய்யாவு!

'நான் சின்னப் பையனாக இருந்தப்ப கோவை மாவட்டத்துல சி.எம்.மாணிக்கம்னா எல்லோருக்கும் தெரியும். புகழ்பெற்ற கரகாட்டக்காரர் அவர். கரகத்தில் அவர் செய்யாத சாகசங்களே இல்லை. அவர் காலில் சலங்கைக் கட்டி தலையில் கரகத்தைத் தூக்கிவெச்சாப் போதும்; ஊரே மெய்சிலிர்த்துப் பார்க்கும். அவர் வீட்டுக்குப் பின்னாடிதான் எங்க வீடு. ஏழு வயசுலேயே அவர்கிட்ட சிஷ்யனாச் சேர்ந்துட்டேன். எங்க குழு ரெட்டை மாட்டு வண்டியைக் கிளப்பிக்கிட்டு ஊர் ஊராப் போகும்.

அப்ப எல்லாம் கரகாட்டம்னா ஊரே ஒண்ணுகூடி கைதட்டி உற்சாகப்படுத்து வாங்க. அந்த உற்சாகமும் கைதட்டலும்தான் எங்க கலையை செழிப்பா வாழவெச்சுது. தை மாசம் தொடங்கி வைகாசி வரை கோவையில் உள்ள எல்லாக் கோயில்களிலும் ஓடி ஓடி கரகம் ஆடுவோம். மாணிக்கம் அய்யாவோட காலத்துக்குப் பிறகு நான் தனியா அய்யாவு கரகாட்டக் குழுவைத் தொடங்கினேன். அதில் நாங்க கரகாட்டத்தோட நிறுத்தாம மயிலாட்டம், காளை மாட்டு ஆட்டம், பொய்க்கால் குதிரைனு பிற கலைகளையும் அறிமுகப்படுத்தினோம்.

சி.எம். மாணிக்கம் கரகாட்டக் குழுவுக்குப் பிறகு நீண்டகாலம் நிலைச்சு நின்ன குழு எங்க குழுதான். ஆட்டம் தொடங்குனா, ஒரு மணி நேரத்துக்குக் குறையாமத் தொடர்ந்து ஆடுவோம். பல சமயம் ஆறு மணி நேரம் கூட ஆட்டம் தொடரும். ஆட்டம் முடியு றப்ப வியர்த்து வழிஞ்சு அரிதாரம் எல்லாம் கலைஞ்சு கலர்கலராப் புது வேஷம் கட்டின மாதிரி இருக்கும். அப்ப எல்லாம் கூப்பிட்ட உடனே போய் ஆடிட முடியாது. மூணு மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும். என்னதான் போட்டி இருந்தாலும் ஆட்டம் முடிஞ்சு, காசைப் பிரிச்சா ஒரு நாளைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்குத்தான் தேறும். ஆனா, ஆடி முடிச்ச பின்னாடி கிடைக்கிற ஆத்ம திருப்தி ஆயுசுக்கும் நிலைக்குமே.

Vanavil New1

இப்ப எனக்கு வயசு 66. ஒன்பது வருஷத் துக்கு முன்னாடி சர்க்கரை நோயால ஏற் பட்ட புண்ணால கால்களை அசைக்க முடி யாமப் போச்சு; இனிமேல் ஆடவே முடியா துனு டாக்டர் சொன்னப்ப உடைஞ்சு போயிட்டேன். ஆட முடியாமப் போயிருச்சேங்கற அவமானமும் அழுகையும் ஒண்ணா சேர, குடிசைக்குள்ள முடங் கிட்டேன். அதோடு என் ஆட்டம் முடிவுக்கு வந்துச்சு.

--- 'சட்டி மீது சட்டி என 16 சட்டிகளை அடுக்கி கரகத்தை கழுத்தோடு சேர்த்து கட்டாமல் ஆடுவது அய்யாவு ஆட்டத்தின் ஸ்பெஷல். உச்சி சட்டியில் எரியும் நெருப்பு ஆட்டம் முடியும் வரை அணையாதாம்.' ----

-- கரகாட்டக்காரன் படம் வந்தபோது சகா கலைஞர்களுடன் 20 தடவை பார்த்து பூரித்திருக்கிறார் அய்யாவு, அதன் பின் கரகாட்டத்தை சிறப்பிக்கும் வகையிலான ஒரு படம் வராதது இவரின் ஆதங்கம்.---

உண்மையில் கரகாட்டம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருச்சு. காலங்காலமாக் கொண்டாடின எங்க கலையை ஒதுக்கிட்டு, இப்ப மக்கள் டிஸ்கோ டான்ஸ் பார்க்கிறாங்க. ஆனா, இப்பவும் என் மனசு அந்தப் பழைய கரகத்தைச் சுமந்து ஆடிட்டுதான் இருக்கு!'' ஆதங்கத்துடன் பேசுகிறார் அய்யாவு.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2