இயற்கை வேளாண் சாகுபடியில் சாதனை படைக்கும் வால்பாறை வாகமலை விவசாயிகள்

 Tuesday, February 26, 2019  06:30 PM

மாட்டுச்சாணம், சாம்பல் ஆகியவற்றையே பிரதான உரமாக பயன்படுத்தி, இயற்கை வேளாண் சாகுபடியில் சாதனை படைக்கின்றனர், வால்பாறை அருகே உள்ள வாகமலை விவசாயிகள்.

கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்திலுள்ள வால்பாறைக்கு அழகு, அதனை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள். காணுமிடமெல்லாம் பச்சைக்கம்பளம் விரித்தாற்போன்று, மடிப்பு மடிப்பான தேயிலை தோட்டங்களுக்குள், மலை முகடுகளில் இருந்து வடிந்து வரும் தண்ணீர் என, பார்ப்போரை வசியம் செய்கிறது.

வால்பாறையில் 80 சதவீதம் தேயிலை தோட்டம், 10 சதவீதம் காபி தோட்டம், மீதமுள்ள 10 சதவீத பரப்பில் மிளகு, ஏலம் சாகுபடி உள்ளது. வனப்பரப்புக்கு இடைப்பட்ட பகுதி என்பதாலும், தனியார் தேயிலை தோட்டங்கள் மட்டுமே உள்ளதாலும், வேறு சாகுபடியில் யாரும் கவனம் செலுத்தவில்லை. தேயிலை தோட்ட வேலை நேரம் போக, மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக்கி, ரசாயன விவசாயத்துக்கு எதிராக, வெற்றிக்கொடி பறக்கவிட்டுள்ளனர் வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் என்றால், நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்; ஏனென்றால், இதுதான் உண்மை.

மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட, வால்பாறை - முடீஸ் வழித்தடத்தில், ஹைபாரஸ்ட் அருகிலுள்ளது வாகமலை எஸ்டேட். அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்களின் 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர்; தங்கள் குடியிருப்பு அருகில், மழை நீர் வடிந்து செல்லும் ஓடை அருகே, காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர். ஆண்டில், ஆறு மாதம் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். மீதமுள்ள ஆறு மாதங்கள் புதர் மண்டி கிடக்கும் இடத்தை, சுத்தம் செய்து, விவசாயத்துக்கு ஏற்ற இடமாக்கியுள்ளனர் நாகமலை விவசாயிகள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து, தேயிலை தோட்ட வேலைக்காக, 80 ஆண்டுகளுக்கு முன், வாகமலைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வந்தனர். இப்போது இரண்டு தலைமுறையாக, இயற்கை விவசாயத்தில் கால்பதித்துள்ளனர். மலைப்பிரதேசத்தில், இங்கிலீஷ் காய்கறி தான் விளைவிக்க முடியுமா? நம்ம ஊரில், வீட்டு தோட்டத்தில் விளைவிக்கும் அனைத்து காய்கறி, கீரை வகைகளையும் செழிப்பாக வளர்க்க முடியுமென நிரூபித்துள்ளனர். மழைநீர் மட்டுமே பாய்ந்தோடும் மண், மனித காலடி படாத இடம், ரசாயன கலப்பு இல்லாத இயற்கை விவசாயம். காய்கறிகளுக்கு இவைகள் மேலும் சுவையூட்டுகின்றன.

இயற்கை விவசாயம்:

வாகமலை விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும், அதிக ஆர்வம் கொண்டதால், வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்கின்றனர். ஓடை பகுதிகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பசும்புல்லை நம்பி, மாடு வளர்க்கின்றனர். அவற்றின் சாணத்தை குவியலாக சேர்த்து, மட்க வைக்கின்றனர். மழை காலம் முடிந்து, வெயில் காலம் துவங்கியதும், நிலத்தை விவசாயத்துக்கு தயார்படுத்துகின்றனர். அப்போது உலர வைக்கப்பட்ட, மாட்டுச்சாணத்தை மண் மீது தூவி, கலக்குகின்றனர். காய்கறி தோட்டத்துக்கு, இதை தவிர, வேறு எதையும் இடு பொருளாக சேர்ப்பதில்லை.

மண் வெட்டியே துணை:

Vanavil New1

பாதங்களை வேகமாக ஊன்றினால், தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதியில் தான் இவர்களின் விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர் கசியும் அளவுக்கு இருந்தாலும், தோட்டத்தில் ஒரு மூலையில் குழி தோண்டியுள்ளனர். அதில் ஊற்றெடுத்து தேங்கும் நீரை, பூவாளியில் எடுத்து, மண் உலரும் போது தெளித்து, விவசாயம் செய்கின்றனர். நிலத்தை தயார்படுத்த மாடுகளை பூட்டி உழவு செய்யும் வசதி அங்கு இல்லை. மண் வெட்டியால் நிலத்தை கிளறி, சமப்படுத்துகின்றனர்.

கமகமக்கும் காய்கறி:

காய்கறி விதைப்புக்கு முன் நிலத்தில் சாணத்தை மட்டுமே இடுகின்றனர். செடி, கொடிகளில் பூச்சி, புழு தாக்குதல் ஏற்பட்டால், வீட்டு அடுப்பு சாம்பலை மட்டுமே தூவுகின்றனர். களைக்கொல்லி மருந்தென்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. இயற்கையாக விளைவிக்கும் காய்கறி, கீரை வகையை பறிக்கும் போதே வாசனை கமகமக்கிறது. இயற்கைக்கு வேறேதும் இணையில்லை என்பதை உணர முடிகிறது.

தேயிலை தோட்ட தொழிலில் ஓய்வு பெற்றாலும், விவசாயத்தில் அக்கறை கொண்ட, ராமர்பாண்டி கூறியது...

வீட்டுக்கு பின் பகுதியிலும், மழைநீர் வடிந்தோடும் ஓடையிலும் விவசாயம் செய்கிறோம். வால்பாறையில் ஜூன் - செப்., மாதம் வரையிலும் மழை அதிகம் பெய்யும். அக்., மாதம் மழை பெய்வது குறைந்ததும், நிலத்தை தயார் செய்வோம். நவ., மாதம் விதைப்பு செய்து, டிச., மாதம் நடவு செய்வோம். பிப்., முதல் அறுவடை துவங்கும். ஜூன் இரண்டாம் வாரம் வரையிலும் காய்கறி பறிக்க முடியும். மாலை நேரத்தில் குடும்பத்துடன் விவசாய பணி செய்கிறோம். இதன் மூலம் குடும்பத்துக்கு வாரம் 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

வாகமலை விவசாயி அய்யாதுரை கூறியது...

கத்தரி, அவரை, பீன்ஸ், பீட்ரூட், சுரைக்காய், முள்ளங்கி, நூல்கோல் போன்ற காய்கறிகளும், மணத்தக்காளி, சிறுகீரை, பசலைகீரை, தண்டங்கீரை வகைகளும் சாகுபடி செய்கிறோம். சாகுபடி நிறைவடையும் போது, செடி, கொடிகளில் இருக்கும் காய்களை விதைக்காக அப்படியே விட்டு விடுவோம். காய்கள் செடியிலே பழுத்து காய்ந்ததும், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, பதப்படுத்தி வைத்து விடுகிறோம். அடுத்த ஆண்டு அவற்றைத்தான் விதைப்புக்கு பயன்படுத்துவோம். இயற்கையாக விளையும் காய்கறி, கீரையை அறுவடை செய்து, வாரந்தோறும் வால்பாறை டவுனில் வியாபாரம் செய்கிறோம்.

வால்பாறை மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரும் காய்கறி விலையை விட குறைவாக விற்கிறோம். இயற்கை காய்கறி என்பதால் மக்களும் தேடி வந்து வாங்குகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதி; நிலத்தை உழவு செய்ய வசதியில்லை; போக்குவரத்து வசதியில்லாத மலைப்பகுதியில், ரசாயன கலப்பு இல்லாத காய்கறி தோட்டம் சாத்தியமாகும் போது எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் கைவசமுள்ள நம்மால், காய்கறி தோட்டம் அமைக்க முடியாதா? மனமிருந்தால் மார்க்கமுண்டு.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2