கோவையில் ஒரு வர்மக்கலை பயிற்சி கூடம்

 Wednesday, February 20, 2019  08:30 PM

வர்மக்கலை என்ற பெயரைக் கேட்டாலே எல்லோருக்கும் இந்தியன் தாத்தாவே நினைவுக்கு வருவார். எதிரிகளைத் தாக்கவும் அவர்களைச் செயலிழக்கவும் செய்கிற வன்மக் கலையாகவே அதை ஊடகங்கள் சித்தரித்திருக்கின்றன. உண்மையில் வர்மக்கலை என்பது ஒருவகை தமிழ் மருத்துவ விஞ்ஞானமே!

பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மருத்துவ முறையில் உடல், மன நோய்களுக்கான தீர்வுகள் உள்ளதாகச் சொல்கிறார் வர்ம ஆசான் டாக்டர் சண்முகம். சமீபத்தில் சென்னை, மாதவரத்தில் சிறப்பு நிலைக் குழந்தைகளின் பெற்றோருக்கான இலவச வர்மப் பயிற்சி முகாமை நடத்த வந்திருந்த டாக்டர் சண்முகம், வர்மக் கலையின் சிறப்புகள் பற்றிப் பகிர்ந்து கொண்ட தகவல்கள்...

வர்மக் கலையில் எனக்கு என் அம்மாவே முதல் ஆசான். கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். என்னுடைய பூர்வீகமான கன்னியாகுமரியில் வர்மக் கலைப் பயிற்சியாளர்கள் அதிகம். அந்தக் கலையின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, 75க்கும் மேலான ஆசான்களிடம் முறையாக இந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். வருமானம் தருகிற ஆசிரியர் வேலை நேரம் போக, ஓய்வு நேரத்தை மக்களுக்குப் பயனுள்ள வகையில் செலவிடும் நோக்கத்தில்தான், வர்மக்கலை சிகிச்சை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டுவருகிறேன்.

கோவை ஆர்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் ஒரு அங்கமான திருமூலர் வர்ம சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாக தமிழகம் முழுவதும் 23 இடங்களில் 600க்கும் மேலான மருத்துவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் இதை ஒரு சேவையாக செய்து வருகிறோம். சமீபத்தில் சென்னையில் நடந்தது `வாத்சல்ய பாவம்’ என்கிற வர்மப் பயிற்சி முகாம். இது சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கானது.

வர்மம்’ என்றால் உடலுக்குள் இயங்கும் நுட்பமான ஆற்றல் என அர்த்தம். அந்த ஆற்றல் தங்கியிருக்கும் இடங்களை வர்மப் புள்ளிகள் என்கிறோம். அந்தப் புள்ளிகளைத் தெரிந்து கொண்டு, அங்கே விரல்களை வைத்து மெதுவான அழுத்தம் கொடுப்பதே வர்ம சிகிச்சை. இதை கை பாகம், செய் பாகம் என இருவிதமாகச் சொல்கிறோம். எந்த விரலை வைப்பது என்பது கை பாகம். என்ன மாதிரியான பயன்பாடு என்பது செய் பாகம். நம் உடலில் மொத்தம் 8 ஆயிரம் வர்மப் புள்ளிகள் உள்ளன. அவற்றில் வெறும் 500 புள்ளிகளை மட்டும் எடுத்து நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம்.

Vanavil New1

சிறப்புக் குழந்தைகளை வளர்ப்பதும், அவர்களுக்கான சிகிச்சைகளுக்கு செலவு செய்வதும், உடல் மற்றும் மனத்தளவில் ஒவ்வொரு பெற்றோருக்கும் சிரமமும், சவாலுமான விஷயம். அந்தக் குழந்தைகளுக்கு வெறும் 10 புள்ளிகளை மட்டும் இயக்கும் முறையை பெற்றோருக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறோம். கூடவே அவர்களுக்கு ஒரு கையேடும் தரப்படும். ஒவ்வொரு மாதமும் அவர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள மையத்துக்குச் சென்று தாங்கள் கொடுக்கிற சிகிச்சை முறை சரியானதுதானா எனத் தெரிந்து கொள்ளலாம். சிகிச்சை சரியாக கொடுக்கப்பட்டால், சீக்கிரமே மாற்றம் தெரியும். சிறப்புக் குழந்தைகளில் பெரும்பாலானோர் படுத்தே இருப்பார்கள். எழுந்து உட்கார முடியாமலும் தன் வேலைகளைத் தாமே செய்ய முடியாமலும் இருப்பார்கள். பேச்சு வராமல் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளிடம் இந்த வர்மக்கலை சிகிச்சையின் மூலம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம். எழுந்து உட்கார, நடக்க, பேச, தன் வேலைகளைத் தாமே செய்து கொள்ள உதவுகிற இந்த சிகிச்சை மந்திரம் இல்லை.

விஞ்ஞானம் என்பதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு இது மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். அவர்கள் ஏற்கனவே குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிற ஆங்கில மருத்துவ முறைகளை நிறுத்த வேண்டியதில்லை. கூடவே இந்த சிகிச்சையையும் தொடரலாம். வர்ம சிகிச்சையின் இன்னொரு சிறப்பு பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தைக்குக் கூட இது பயன்படும் என்பது.

பிறந்ததும் அழாமல் இருக்கும் குழந்தைகள் சிறப்புக் குழந்தைகளாக மாற வாய்ப்புண்டு. அப்படி அழாத குழந்தைக்கு உடனடியாக வர்ம சிகிச்சை கொடுத்து சரியாக்க முடியும். தவிர, மூளை, எலும்பு, தசை மண்டலம் தொடர்பான பல நோய்களுக்கும், இடுப்பு வலி, ஆர்த்ரைடிஸ், மூட்டு நழுவல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த முறையில் தீர்வுகள் உண்டு. மிக முக்கியமாக இன்று பெரிதாகப் பேசப்படுகிற ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தப் பிரச்னைக்கு இந்த சிகிச்சையில் முழுமையான தீர்வு காணலாம்’’ என்கிற டாக்டர் சண்முகம், ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிற வர்மக் கலையின் பின்னணிபற்றியும் விளக்குகிறார்.

வர்மக்கலை தற்காப்புக்காகவும் பயன்படுத்தப்படுவது உண்மையே. `அஞ்செட்டு பெருக்கம்’, `அங்கம் 64’ போன்ற நூல்கள் இந்தக் கலையின் மூலம் எதிரிகளைத் தாக்குவது பற்றிப் பேசுபவை. அதே நேரம் `நரம்பு சூத்திரம்’, `வர்ம காண்டம்’, `நரம்பறை’ போன்றவை இந்தக் கலையின் மூலம் நோய்களை எப்படித் தீர்ப்பது எனப் பேசுபவை. வர்மக் கலையின் நுட்பம் தெரியாத சிலர், அது அடுத்தவர்களை அடிப்பதற்கான, வீழ்த்துவதற்கான கலை என சித்தரித்திருக்கலாம். ஆனால், வர்மக் கலை என்பது நோய்களைத் தீர்க்க மட்டுமின்றி, ஆன்மிகத்தோடும், யோகத்தோடும், வானியலோடும், மனித உணர்வுகளோடும் தொடர்புடைய ஒன்று. அது உலக மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இப்படி இலவசப் பயிற்சி முகாம்களை நடத்துகிறோம்’’ என்கிறார்.

- எம்.ராஜலட்சுமி, படம்: ஏ.டி.தமிழ்வாணன்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2