பொள்ளாச்சியில் முன்னுதாரணமாய் திகழும் ஒரு அரசு பள்ளி

 Tuesday, February 12, 2019  05:30 PM

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இயற்கையை பாதுகாக்க கரம் கோர்த்துள்ளனர். விழிப்புணர்வு பணி மட்டுமின்றி, செயலாக்கமும் செய்து அசத்தி வருவது இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ளது பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி. கல்வியை மட்டும் கற்பித்தால் போதாது என நினைத்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாற்று திட்டம் செயல்படுத்த திட்டமிட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் விளையாட்டு, கலை உள்ளிட்ட திறமைகளை வெளிக் கொண்டு வர அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுடன் பயிற்சியும் கொடுக்கின்றனர்.பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தருதல், முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மாணவர்களுக்கு சொல்லித்தருவதில் தவறுவதில்லை. 'திறம்பட கேள்' என்ற பெயரில், மாதத்துக்கு ஒரு நிகழ்வு நடத்தி, சாதனை படைத்தவர்கள், கதை சொல்லிகளை அழைத்து வந்து, மாணவர்களிடம் பேச வைத்து, அவர்களது ஆற்றலை மேம்பட வைக்கின்றனர்.மேலும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்களிடம் விவசாயம் சம்பந்தமாக தோட்டம் அமைத்து பராமரித்தல்; இயற்கை பாதுகாக்க மரக்கன்று வளர்ப்பிலும் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர்.

மரங்கள் பராமரிப்பு

பள்ளி மாணவர்கள், புங்கை, வேப்பன், மா, சரக்கொன்றை, பெரு நெல்லி, பூவரசு, வாதரசி, புளி என பல வகை மரங்களை ஜூன், 2013ல் நட்டனர். மரங்கள் வளர்ச்சி பெற தினமும் மரத்துக்கு தேவையான நீரை ஊற்றி அதனை பராமரிக்கின்றனர். மரங்களின் வளர்ச்சியை கண்டு மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்கள், கோடை விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கு தினமும் வந்து, மரங்களை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

காய்கறி தோட்டம்


Vanavil New1
மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் காய்கறி தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். தக்காளி, பச்சை மிளகாய், கத்தரி, கொத்தவரை, முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், சத்துணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மண்புழு உரம், சாணம், தென்னை நார் உள்ளிட்ட இயற்கை உரம் கொடுத்து செடிகள் பராமரிக்கப்படுகின்றன.

தாகம் தீர்க்க

பள்ளி வளாகத்தில், சுற்றித்திரியும் பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீரும், பசியை போக்க தானியங்களையும், பள்ளி வளாகத்திற்குள் மூன்று இடங்களில் சட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான தானியங்களை பள்ளி அருகேயுள்ள வீடுகளில் தானமாக பெற்று பறவைகளுக்கு வைக்கின்றனர். கல்வியோடு, இயற்கை கல்வியையும் கற்று, மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

விடுமுறை இல்லை

மாணவர்கள் கூறுகையில், 'கல்வியோடு மற்ற விஷயங்களையும் கற்று கொடுப்பதால், பயனாக உள்ளது. மரங்கள் வளர்ப்பு எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருவதால், விடுமுறை நாட்களிலும் அதனை பராமரிக்க, பள்ளிக்கு வருகிறோம்.பள்ளி நாட்களில், நாங்கள் மதிய உணவு உண்ணும் போது, மீதமாகும் உணவுகளை உண்ண, 50க்கும் மேற்பட்ட புறா, காகம் உள்ளிட்ட பறவைகள் வருகின்றன. விடுமுறை நாளில், அவை பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பக்கூடாது என்பதற்காக, பள்ளிக்கு வந்து தினமும் உணவு அளிக்கிறோம். பிற உயிர்களையும் தன்னுயிர் போல நேசிக்க ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்,' என்றனர்.

மரங்கள் வளர்ப்பால் பணியில் திருப்தி

பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள் கல்வியோடு மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்த மாணவர்களிடம் காணப்படும் ஈடுபாடு தான் முக்கிய காரணம். அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால், எங்களால் செயல்படுத்த முடிகிறது. இப்பள்ளி தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவருவதும் மாணவர்களின் கல்வி அறிவுக்கான சான்றாகவும் உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் எங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கிராமப்புற பள்ளியாக இருந்தாலும், முழு மனதோடு பணியாற்றும் திருப்தி கிடைக்கிறது,' என்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2