இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திமலை; சுற்றுலா தலமாக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

 Tuesday, February 12, 2019  04:30 PM

இயற்கை எழில் சூழ்ந்து காட்சியளிக்கும் திருமூர்த்தி மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகத் திகழும் திருமூர்த்தி மலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் கொட்டும் மழைநீர் பஞ்சலிங்க அருவிக்கு நீராதாரமாக உள்ளது.

6 முதல் 8 மாதங்கள் வரை அருவியில்ல் நீர்வரத்து இருக்கும். இதனால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சுற்றுலா வருகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், சுற்றுலா செல்லும் மாணவர்களின் பட்டியலில் திருமூர்த்திமலை தவறாது இடம்பிடிக்கும்.

அமணலிங்கேஸ்வரர் கோயில்

திருமூர்த்தி மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்தி வழிபாடு சிறப்பு பெற்றது. மகா சிவராத்திரி, அமாவாசை, மகாளய அமாவாசை, தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். தை, ஆடி மாத அமாவாசையன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து வழிபடுவது சிறப்பு.

ஆன்மிக வழிபாடு, பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், திருமூர்த்தி அணை, மலைகளைக் குடைந்து சுரங்கம் வழியாகப் பாய்ந்து வரும் காண்டூர் கால்வாய், மீன் பண்ணை, நீர்மின் நிலையம், நீச்சல் குளம், விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகள், படகு சவாரி, உலக சமாதான ஆலயம் ஆகியவை இங்குள்ளன.

எண்ணற்ற சித்தர்கள் தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட இடமாகவும், இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகவும், மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்ற குடைவரைக் கோயிலாகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறது.

சப்த ரிஷிகளில் முதன்மையான ரிஷியாக விளங்கிய அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசுயாதேவியுடன் தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித பூமிதான் திருமூர்த்திமலை என்றும், பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தம்பதியருக்குப் பிறந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் சமணர்கள் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். மும்மூர்த்திகளின் வழிபாடு நடைபெறும் இடத்தில் உள்ள ஒரு பெரிய பாறையில் தீர்த்தங்கரர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இவர்களின் மூவரின் சிலையே பின்னாளில் மும்மூர்த்திகளாக மக்கள் பாவிக்கத் தொடங்கியதாகவும், அது தொடர்பான கதைகள் உருவாக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.


Vanavil NEw2
பஞ்சலிங்க அருவி

அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் மலைகளுக்கு நடுவே பாயும் பஞ்சலிங்க அருவியில் நீராடுவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்த அனுபவத்தை அளிக்கும். அங்கிருந்து மேல்நோக்கிச் சென்றால், சிறிது தொலைவில் 5 லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்க சிலைகளைக் காணலாம். இந்த இடத்தில் குரு முனி அகத்தியர் வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

விஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது, பரவலாக பாளையக்காரர்களின் தலைமையில் சிற்றரசுகள் இருந்தன. அப்போது, தளி பாளையபட்டுவை எத்தலப்ப நாயக்கரின் வம்சாவளியினர் ஆட்சி செய்தனர். கி.பி. 1800-ல் எத்தலப்பர் தலைமையில் இயங்கிய தளி பாளையபட்டுவின் கீழ் தொண்டாமுத்தூர், துங்காவி, மெட்ராத்தி, மைவாடி, ஆவலம்பட்டி உள்பட 14 ஜமீன்கள் இயங்கியதும், காணிக்கை செலுத்தி வந்துள்ளதும் `கீர்த்தி வீரன் எத்தலப்பன்` என்னும் வரலாற்று நூல் மூலம் தெரியவருகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நெருங்கிய நண்பராக விளங்கிய எத்தலப்பர், ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கட்டபொம்மன் கொல்லப்பட்டதையறிந்து வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து, தஞ்சையில் இருந்து தளிக்கு வந்த தூதுவர்களின் தலைவன் `அந்திரை கேதிஷ்` என்ற ஆங்கிலேயனை புளியமரத்தில் தூக்கிலிட்டார் எத்தலப்ப நாயக்கர்.

கி.பி. 1801-ல் நிகழ்ந்த இந்த சம்பவத்தை குறிக்கும் கல்வெட்டும், கல்லறையும் அங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டிப் போராடிய தியாகிகளின் நினைவாக உருவாக்கப்பட்ட கல் சிற்பங்கள், காண்டூர் கால்வாய் கரையில் வைக்கப்பட்டுள்ளன. இவையாவும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களாக உள்ளன.

இயற்கைச் சூழலோடு, வரலாற்றுத் தகவல்களையும் அறிந்துகொள்வது அடுத்த தலைமுறைக்கு பாடமாகவும் அமையும்.
எனினும், ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பேர் வந்து செல்லும் இந்த தலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல், அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத் துறையால் அருவிக்குச் செல்வோரிடமும் நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ.25, வேனுக்கு ரூ.50, பேருந்து, லாரிகளுக்கு ரூ.100, மாட்டு வண்டி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 என வசூலிக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பேருந்து நிலையம், பார்க்கிங் வசதி, கழிப்பிடம், குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கூறும்போது, 'ஏற்கெனவே பலமுறை திருமூர்த்திமலையை சுற்றுலாத் தலமாக்க திட்ட அறிக்கை தயாரித்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறையோ அல்லது இந்து சமய அறநிலையத் துறையோ ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், சுற்றுலாத் துறை சார்பில் ரூ.8 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை' என்றனர்.

இயற்கையின் கொடையுடன், ஆதி மனிதர்கள், சமணத் துறவிகள், சித்தர்கள், வரலாற்று நாயகர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் திகழும் திருமூர்த்திமலை சுற்றுலாத் தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும்.


Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq1
Website Square Vanavil2
SNS_Sq2