மேட்டுப்பாளையம் அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் உலியூர் பழங்குடியின கிராமம்

 Tuesday, February 12, 2019  02:30 PM

மேட்டுப்பாளையம் அருகே உலியூர் பழங்குடியின கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் அவலநிலை தொடர்கிறது.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சியில் 1ஆவது வார்டுக்கு உள்பட்டது உலியூர் பழங்குடியின கிராமம். இக்கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின கிராம மக்கள் 20 குடும்பத்தினர் 70 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 1962ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் 20 குடும்பங்களுக்கும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால் மின் இணைப்பு மட்டும் வழங்கப்படாமல் இருந்தது. ஒரு குடும்பத்துக்கு தலா மூன்றரை ஏக்கர் வீதம் மொத்தம் 75 ஏக்கர் நிலமும் விவசாயத்துக்காக வழங்கப்பட்டது. இதில் அவர்கள் வாழை, நெல், காய்கறி வகைகளைப் பயிரிட்டு வந்தனர்.

சாலை வசதி இல்லாததால் வீட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல பெரும் அவதியுற்று வந்தனர். சாலை வசதி இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இங்கு வருவதில்லை. சாலை வசதி இல்லை என்பதால் இங்குள்ள குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கின்றனர். மேலும், இக்கிராமத்தில் தெருவிளக்கு, மின்சாரம், கழிவறை வசதிகளும் இல்லை.


Vanavil NEw2
காமராஜர் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தற்போது இடிந்த நிலையில் உள்ளன. இதனால் கூரை மூலம் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர். அவசரத் தேவைக்கு இக்கிராமத்தில் இருந்து லிங்காபுரம், சிறுமுகை செல்ல ஜீப் வர வேண்டும் என்றால் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வாடகை கேட்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அடிப்படை வசதிகளின்றி பரிதவித்து வரும் இக்கிராம மக்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து உரிய வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இக்கிராமத்தை சேர்ந்த முதியவர் முத்தன் கூறியதாவது:

70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் கிராமத்துக்கு எந்த அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை. மின்சாரம் இன்றி இருட்டிலேயே குடியிருந்து வருகிறோம். இரவு நேரத்தில் யானைகள் ஊடுருவி குடியிருப்புகளை சேதப்படுத்துகின்றன. இக்கிராமத்துக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாரும் வருவதில்லை. குடியிருப்புகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் கூரை வேய்ந்து வசித்து வருகிறோம். சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லாவிடம் கேட்டபோது, உலியூர் கிராமத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை என புகார் வந்ததும் உடனடியாக தெரு விளக்குகள் சீரமைத்து தரப்பட்டது. 5 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை வசதி தொடர்பாக உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2