கோவையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: 12.09 மீட்டராக அதிகரித்துள்ளது.

 Tuesday, February 12, 2019  11:30 AM

தமிழகத்தில், நீலகிரி உட்பட, 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம், சரிந்துள்ளது. ஆனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து கண்காணிக்கும் பணியை, பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு கிணறுகளில் இருக்கும் நீர் மட்டத்தை உரிய கால இடைவெளியில் அளவீடு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கிறது. அதன் அடிப்படையில், நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான உத்தரவுகளை அவ்வப்போது அரசு பிறப்பிக்கிறது.

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடுகளின்படி, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம், குறைந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, பெரம்பலுார் மாவட்டத்தில் 5.03 மீட்டர் குறைந்துள்ளது. கடலுார், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, கோவை மாவட்டத்தில், 3.56 மீட்டர் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 1.45 மீட்டர் அதிகரித்துள்ளது.


Vanavil New1
ஆனால், மலை மாவட்டமான நீலகிரியில், 0.38 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

கைகொடுத்த கோடைமழை

!கடந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழை, அதற்கு முன் பெய்த கோடைமழை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. தஞ்சை, நாகை மாவட்டங்களில், 'கஜா' புயல் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

கோவையில், 2018 ஜனவரியில், 15.65 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டு ஜனவரியில், 12.09 மீட்டராக அதிகரித்துள்ளது.

திருப்பூரில், 2018 ஜனவரியில் 10.84 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டு ஜனவரியில், 9.39 மீட்டராக அதிகரித்துள்ளது. நீலகிரியில், கடந்தாண்டு ஜனவரியில், 1.81 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டில் 2.19 மீட்டராக சரிந்துள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2