பாலமலை அரங்கநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 Monday, February 11, 2019  07:26 AM

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள தென்திருப்பதி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஆதிவாசிகள் ஆராதிக்கும் இந்தக் கோயில் வைணவத்தின் பிரதம ஆச்சாரியாரான ராமானுஜர் வந்து சேவித்த பெருமையுடையது. இக்கோயில் தற்போது பெரும் பொருள் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மகா கும்பாபிஷேக விழாவானது கோயிலின் பரம்பரை அறங்காவலர் யு.ஜெகதீசன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், திவ்ய பிரபந்த வேத பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமை பெருமாளுக்கு அலங்கார, திருமஞ்சனமும், பெருமாள் யாக சாலையில் எழுந்தருளலும், விமானக் கலச ஸ்தாபிதமும், சாற்றுமுறைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கியது. நாடி சந்தானம், யாத்ரா தானங்கள் பூர்ணாஹுதி நிறைவு பெற்றவுடன் புனித நீர் அடங்கிய தீர்த்த கலசங்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.

இதனையடுத்து காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் ஸ்தலத்தார் வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர் புனித நீரை கோபுரக்கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அனைத்து கோபுரக் கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.

Vanavil New1

சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அச்சம்பாளையம் சண்முகம், டி.ஜி.புதூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் பஜனைக் குழுவினரின் பஜனை, யு.ஐ.டி பள்ளிக் குழந்தைகளின் நாட்டியாஞ்சலி, வி.சி.ஆறுக்குட்டி குழுவினரின் ஜமாப் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

மாலையில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2