மண்ணின் மைந்தர் - திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் - ஒரு சகாப்தம்

 Saturday, February 9, 2019  05:30 PM  1 Comments

சினிமாவில் கதை சொல்லுவது என்பது தனி கலை. அப்படியான கதைசொல்லிகள், சொல்லுகிற உத்திகளால், நம்மை அப்படியே கட்டிப்போட்டுவிடுவார்கள். அப்படியே நம்மைக் கட்டிப்போடுகிற வித்தைதான் திரைக்கதை. கதையானது மிகமிகச் சாதாரணமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் சொல்லுகிற விதத்தில்தான் அதன் சுவாரஸ்யமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது. இந்தியத் திரையுலகிலேயே, கதை சொல்லிகளில், தனித்துவம் வாய்ந்தவர், ரசிகர்களைக் கட்டிப்பொடுகிற வித்தையைக் கொண்டவர், திரைக்கதை ஜாலம் அறிந்தவர், திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர், திரைக்கதை மன்னன் என்றெல்லாம் பேரும்புகழும் கொண்டவர் கே.பாக்யராஜ். இந்த யுக்திகளில் வல்லவர் என்பதால்தான் எல்லோரும் பாக்யராஜைக் கொண்டாடுகிறார்கள். ‘நம்ம ஆளு’ என்று போற்றிப் புகழுகிறார்கள்.

ஒவ்வொரு இயக்குநரும் பட்டறைக்குச் சொந்தக்காரர்கள். சினிமாப் பாசறையை கட்டமைத்துக்கொண்டவர்கள். இந்தப் பட்டறைகளில் இருந்து தொழில் கற்றுக் கொண்டு, தனியே கடை வைத்தவர்கள், கதை பரிமாறியவர்கள் ஆயிரமாயிரம். அப்படிப் பார்த்தால், தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி சினிமா உலகுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், கே.பாக்யராஜின் பட்டறையில் இருந்தும், பாசறையில் இருந்தும் தேர்ந்த தொழிலுடன் வந்து கொடிநாட்டியவர்களே அதிகம்.

கோவையில் இருந்து ஆசைகளும் ஏக்கங்களுமாய் சினிமா உலகில் தடம் பதிக்க வந்த பாக்யராஜுக்கு, இன்றைக்கு அவர் எங்கு சென்றாலும் சிகப்புக்கம்பள வரவேற்பு அமர்க்களப்படுகிறது. ஆனால், அப்போது வந்த தருணத்தில், வானில் இருந்து தேவர்கள் பூமாரியெல்லாம் பொழியவில்லை. அத்தனை கஷ்டநஷ்டங்களையும் மான அவமானங்களையும் வலிவேதனைகளையும் கடந்த பொழுதுகள்தான் அதிகம்.

குருவை மறந்தவர்கள், செழித்து ஜெயித்ததாக, ஜெயித்துச் செழித்ததாக சரித்திரமே இல்லை. இன்றைக்கு மிகப்பெரிய உச்சம் தொட்ட நிலையில் இருக்கிற கே.பாக்யராஜ், இந்த நிமிடம் வரை, குருமரியாதையுடன், அதே சிஷ்ய உணர்வுடன் அவர்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். குருவைப் போற்றிக் கொண்டே இருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த, பத்தரை மாத்து சொக்கத்தங்கமென ஜொலித்துக்கொண்டிருக்கிறார் பாக்யராஜ்.

பாரதிராஜாவின் 16 வயதினிலே, அவருக்கான புதிய வாசலோ, வாழ்க்கையோ மட்டுமே இல்லை. தமிழ் சினிமாவுக்கான புதிய வாசலாக, புதியதொரு உதயமாக, அற்புதமானதொரு விடியலாக அமைந்தது. அதனால்தான், அந்தப் படத்தில் பணியாற்றிய அத்தனைபேரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

16 வயதினிலே, பாரதிராஜாவுக்கு முதல்படம். இளையராஜா பாடிய முதல்படம். மலேசியா வாசுதேவனுக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்த பாடலைத் தந்த படம். ஒளிப்பதிவாளர் நிவாஸின் ஒளி ஓவியங்களை, உலகுக்கு உணர்த்திய படம். ஸ்ரீதேவியின் உறுத்தாத அழகை, அழகாய் காட்டிய படம். ரஜினி பேசிய பஞ்ச் வசனம் இடம் பெற்ற முதல் படம். டைமிங்ரைமிங் சொல்லி, கவுண்ட்டிங் கொடுக்கும் கவுண்டமணியின் முத்திரைக்கான படம். தேர்ந்த நடிகனாக கமலை வெளிக்காட்டிய படம். கே.பாக்யராஜை, கோவை டூ கோடம்பாக்கத்துக்கும், கோடம்பாக்கம் டூ ரசிகர்களின் மனங்களுக்கும் என கைப்பிடித்து, அழைத்துக் கொண்டு வந்து சேர்த்த படம்.

பிறகு, சில படங்களுக்குப் பிறகு, தானே இயக்குவது என உறுதியானார் பாக்யராஜ். இயக்குவதை குறிக்கோளாகக் கொண்டிருந்த பாக்யராஜ், தன் முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில், இரண்டாம் நாயகனாக நடிக்கவேண்டியதாயிற்று. அதேபோல், குருநாதரின் இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாகவும் அறிமுகமானார். இது இன்னொரு வெளிச்சம். இன்னொரு வாசல். இன்னொரு பாய்ச்சல்.

அநேகமாக, தன்னுடைய பலம் என்னவோ அதைக் கொண்டே வெற்றிகாண்பதுதான் ஜெயிப்பதற்கான லட்சணம், வழி. ஆனால், தன்னுடைய இரண்டு மைனஸ்களையே பிளஸ்ஸாக்கிக் கொண்டு, ஜெயித்தவர் பாக்யராஜாகத்தான் இருக்கமுடியும். தன் கீச்சுக்குரலையும் கண்ணாடியையும் தன் கதைக்கு வெகுவாகப் பயன்படுத்தி வெற்றி அடைந்தார். அல்லது அந்தக் கண்ணாடியையும் குரலையுமே ரகசிய கேரக்டர்களாக வடிவமைத்தார் என்று இப்படியும் சொல்லலாம்.

அதுமட்டுமா?

நாம் எல்லோருமே செண்டிமெண்டுகளால் நிரம்பியவர்கள். அதிலும் சினிமாவுக்குள் தும்மினால், இருமினால் என செண்டிமென்டுகளால் கட்டமைக்கப்பட்ட உலகம். ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவோ, அல்லது வெகு முக்கியமானதாகவோ எடுத்துக்கொள்ளவில்லை பாக்யராஜ்.

படத்தின் முதல் காட்சியைக் கூட செண்டிமெண்டாகவும், பாஸிட்டீவாகவும் படமாக்குகிற வேளையில், படத்தின் டைட்டிலில் சமரசமே செய்துகொள்ளவில்லை. சுவர் இல்லாத சித்திரங்கள் என்றொரு நெகட்டீவ் டைட்டில் வைத்தார். அடுத்து, ஒரு கை ஓசை என்றொரு டைட்டில். அதுவும் நெகட்டீவ். இதன் பிறகு மெளன கீதங்கள். சரி… அடுத்து என்னடாவெனப் பார்த்தால், இன்று போய் நாளை வா என்றார். போகட்டும், அடுத்தாப்ல என்ன என்று கவனித்தால், விடியும் வரை காத்திரு என்றார். இப்படி நெகட்டீவ் டைட்டில்கள் பற்றி அலட்டிக்கொள்ளவோ, குழம்பிக்கொள்ளவோ இல்லை. அவற்றுக்குக் காரணம்… பாக்யராஜுக்குள் இருந்த, இப்போதும் இருக்கிற பாஸிடீவ் எனர்ஜி

Vanavil New1

‘சரோசா… குப்பை கொட்றியா கொட்டு கொட்டு’ என்பது இன்றைக்கும் மனங்களில், சிந்தாமல் சிதறாமல் இருக்கிறது. ‘காதல் வைபோகமே’ பாட்டு இப்போது கேட்டாலும் புதியதொரு வைபவம்தான் நமக்கு!

ஒருகை ஓசையின் ‘வாத்து மடையன்’ காமெடியும் வாத்து மடையன் வார்த்தையும் பாக்யராஜால்தான் பிரபலம். முருகன், சங்கிலி முருகனாக இன்றைக்கும் வலுவாக இருப்பதற்கும் ஒரு கை ஓசையே சத்தமிட்டு, அவரை வெளிக்காட்டியதுதான்.

மெளன கீதங்கள் ரகுவையும் சுகுணாவையும் மறக்கவே முடியாது. மூன்றாவது படமான இதில், மொத்தப் பாய்ச்சலையும் காட்டி, கதை சொல்லுவதில் வித்தை காட்டியிருப்பார் பாக்யராஜ். இன்றைக்கு கதையை மூடி மூடி வைத்துக்கொண்டுதான் படம் ரிலீஸ் பண்ணுகிறார்கள். கதையே இல்லாவிட்டாலும் கதை இருப்பது போல், பாவ்லா பண்ணி, ப்ரமோட் பண்ணுகிற நிலை. ஆனால், பிரபலமான வாரப் பத்திரிகையில், மெளன கீதங்கள் படத்தின் கதையையும், காட்சிகளையும் வசனங்களையும் வாராவாரம் வரச் செய்தார் பாக்யராஜ். ‘இதோ… என் உள்ளங்கைல வைச்சிருக்கறது இதுதான்’ என்று கார்டுகளையெல்லாம் மொத்தமாகக் காட்டினார்.

அட… அதான் படிச்சாச்சே… அப்புறம் எதுக்கு படம் பாக்கணும் என்று ரசிகர்கள் நினைக்கவில்லை. படிச்சதே இவ்ளோ சுவாரஸ்யம்னா, அதைப் படமா இந்த ஆளு என்னவெல்லாம் பண்ணிருப்பார் என்று படையெனத் திரண்டு வந்தார்கள் ரசிகர்கள். வாசகர்களை ரசிகர்களாக்கினார். ரசிகர்களை வாசிப்புக்குள் நகர்த்தினார். ஒரு ஷோவில் படம் பார்த்த ரசிகர்களை விட, ஹவுஸ்புல் பார்த்துவிட்டு, ஏக்கத்துடன் திரும்பிச் சென்றவர்கள் மூன்று மடங்கு. உள்ளேயும் வெளியேயுமாக இருந்தவர்களில் பலரும், மூன்று நான்கு முறை பார்த்தவர்கள். குடும்பத்தோடு வந்து பார்த்தார்கள். பெண்களிடம் தனியிடம் பிடித்தார் பாக்யராஜ். இதுவரை பெண்களிடம், அப்படியொரு இடத்தையும் எவரும் பிடிக்கவில்லை. அவரின் இடத்துக்கும் எவரும் வரவில்லை.

ஹீரோயிஸம் என்பதே பில்டப்புகளால் கட்டமைக்கப்பட்ட பில்டிங் என்பார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பாக்யராஜ், தன்னைத் தாழ்த்திக் கொண்டார். உயர்ந்து நின்றார். தன்னைத் தானே கேலி பேசிக்கொண்டார். அசத்தினார்.

இந்தக் கதைதான் செய்யவேண்டும். இப்படித்தான் கதை மாந்தர்களை உருவாக்கவேண்டும். இந்தந்த மாதிரியான பெயர்களைத்தான் சூட்டவேண்டும் என்கிற ஒரு வட்டத்துக்குள் சுருங்கிக்கொள்ளவில்லை.அவருடைய படங்கள் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் படமாக்கப்பட்டு வெற்றி அடைந்தன. அமிதாப்பை வைத்து இவர் இயக்கிய ஆக்ரிரஸ்தா படம், அமிதாப்பின் திரையுலகில், அமிதாப் படத்தை பாக்யராஜ் படம் என்றும் டைரக்டர் படம் என்றும் கொண்டாடித் தீர்த்தது பாலிவுட் உலகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்கிற டைட்டில் கார்டுக்கு, ஸ்ரீதர், கே.பாலசந்தருக்குப் பிறகு தனிமுத்திரையும் அசத்தலான அப்ளாஸ்களையும் அள்ளியவர் எனும் பெருமை கொண்டவர். வசனங்களை எழுதுவதில் மன்னன். ஆனாலும் மெளனகீதங்களின் க்ளைமாக்ஸில் மெளனம் கடைப்பிடித்திருப்பார். முந்தானை முடிச்சு படத்தின் இறுதியில் காட்சிகளைக் கொண்டு நிரப்பி முடிவை ஏற்படுத்தியிருப்பார். இது நம்ம ஆளு படத்தில், தேவையான வசனங்களை மட்டும் கொண்டும் சோமயாஜுலுவின் எக்ஸ்பிரஷன்களைக் கொண்டும் முடித்திருப்பார்.

ஒரு காமெடிக் காட்சியை சட்டென்று சோகக் காட்சியாக மாற்றுவதும் பார்ப்பவர்களின் மனமெல்லாம் பாரமாகிக் கிடக்கிற வேளையில், தடாலென்று அதற்குள் காமெடியைப் புகுத்தி மனசை இலகுவாக்குவதுமான ரசவாதம், கே.பாக்யராஜுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

அதேபோல், இசையமைப்பாளர் உள்ளிட்ட விஷயங்களிலும் குறுக்கிக் கொண்டதில்லை. சொல்லப்போனால், கங்கை அமரனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. கங்கை அமரன், எம்.எஸ்.வி., இளையராஜா, சங்கர்கணேஷ் என்று மாற்றிமாற்றி பயன்படுத்தினார். ஒருகட்டத்தில் தானே இசையமைக்கத் தொடங்கினார். ஹிட்டு ஹிட்டான பாடல்களை, லட்டுலட்டாகத் தந்தார். பிறகான சூழலில், மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்தார்.

திரையுலகில், ஒரு இயக்குநர் ஹீரோவாக கைத்தட்டுகள் வாங்கியதும் ஒரு ஹீரோ, எல்லாமாக இருந்து சினிமாவைக் கொடுத்ததும் என சாதனைகள் புரிந்தது அநேகமாக பாக்யராஜாகத்தான் இருக்கும். இதில் பாக்யா வாரப்பத்திரிகையின் ஆசிரியரின் பணியையும் இணைத்துக் கொண்டால், மலைத்துதான் போவோம். அட்டைப்படம், கேள்வி பதில் என அதிலும் தனித்துத் தெரிந்தார். அதுதான் பாக்யராஜ் டச்.

இத்தனை சாதனைகளையும் படைத்த, திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இன்னும் ஆரோக்கியத்துடன் இருந்து சிறப்புற வாழ, மனதார வாழ்த்துவோம்!


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Vikram lalith commented on 5 month(s) ago
ஆம், திரைக்கதை என்ன என்று உணர்த்திய மேதை.....
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2