3 மாவட்டத்தில் தேடியும் தனது வனத்தை காணோம்! சின்னதம்பியை காக்குமா வனத்துறை?

 Saturday, February 9, 2019  04:30 PM

கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்திலும், தனது வனத்தை தேடி சின்னதம்பி அலைந்து வருகிறான். இனிமேலாவது, வனத்துறையினர் அதனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை, சின்னதடாகம் பகுதியில், மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட 'சின்னதம்பி' என்ற காட்டு யானை, டாப்சிலிப்பில் விடப்பட்டது. அங்கிருந்து, கிராமங்கள், விவசாய நிலங்கள் வழியாக, எட்டு நாட்களாக, 130 கி.மீ., துாரம் பயணம் செய்துள்ளது. திருப்பூர் மாவட்ட பகுதியில் எட்டு நாளாக முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம், திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள்ளும் பயணம் மேற்கொண்டுள்ளது.

அதிக நாட்கள் அமராவதி சர்க்கரை ஆலை, கழிவு நீர் குட்டையில் முகாமிட்டிருந்ததை, குட்டையை மூடி வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால், ஓய்வு எடுக்க இடம் தேடியும், வனத்தை தேடியும் அலைகிறது.நேற்று முன்தினம், மேற்கு நீலம்பூர் பகுதியிலுள்ள கரும்பு தோட்டம், நெல் வயல்கள் வழியாக, மடத்துக்குளம் கழுகரை வழியாக சென்று, இரவு அமராவதி ஆறு வழியாக, திண்டுக்கல் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதிக்கு சென்றுள்ளது.

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியாக இருந்ததால், வனத்துறையினர் பட்டாசு வெடித்து, வழி மாற்றியுள்ளனர். ஆற்றுக்குள் சிறிது துாரம் நடந்து, பாறைகள், உயர்ந்த அணைக்கட்டு என்பதால், தெற்கு நோக்கி செல்லவில்லை. நேற்று அதிகாலை, அமராவதி ஆறு செங்கழனி புதுார் கால்வாய்க்கும் இடையிலுள்ள, வயல் பகுதிக்குள் வநது, கரும்பு காட்டிற்குள் பகல் முழுவதும் ஓய்வு எடுத்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், கடும் அவதிப்பட்டு வந்தது. மாலை வெளியில் வந்தது. கரும்பு உண்டுவிட்டு, மீண்டும், மடத்துக்குளம் பகுதியை நோக்கி நடந்தது.

Vanavil New1

நகரப்பகுதி என்பதால், வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் தடுத்து, திருப்பி விட்டனர். மீண்டும் அமராவதி ஆறு சென்று, கரை ஓரத்திலேயே, தென்னந்தோப்புக்குள் சென்று, அங்கும் தங்காமல் மீண்டும், கரும்பு தோட்டத்திற்கு வந்தது.சோர்வடைந்த சின்னதம்பி இரு நாட்களாக போதிய உணவு, நீர் மற்றும் ஓய்வு எடுக்க உகந்த இடம், நிழல் கூட கிடைக்காமல் கடுமையாக பாதித்துள்ளது.

மக்களை பார்த்தால், கவலை படாமலும், மிரட்டாமலும் 'சாது' வாக இருந்த சின்னதம்பி, தற்போது பயந்து, மக்கள் இருந்தால் வெளியில் வராமல் முடங்கியுள்ளது.

யானைகள் வனத்தில் அதிக துாரம் நடந்தே உணவு உண்ணும்; ஒரு வாரமாக சின்னதம்பி நடை குறைந்துள்ளதால், உணவு எடுப்பதும் பெருமளவு குறைந்துள்ளது.உடலும் மெலிந்து, கம்பீரமும் குறைந்து, சோகமாக சுற்றி வருகிறது. வனத்திற்குள் செல்ல முயற்சித்தாலும், வழி தெரியாமல், திணறி வருகிறது.வனத்திற்குள் அனுப்ப, கலீம், மாரியப்பன் என்ற இரு 'கும்கி' யானைகள் கொண்டு வந்த வனத்துறையினர், அதனையும் பயன்படுத்தாமல் உள்ளனர்.

தற்போது சின்னதம்பி உள்ள பகுதியிலிருந்து, 12 கி.மீ., துாரத்தில் வனப்பகுதி உள்ளது.மூன்று மாவட்டங்களை கடந்தும், வனத்திற்கு வழி தெரியாமல் அலைந்துவரும் சின்னதம்பியை காப்பாற்றவும், பாதுகாப்பாக அதனை வனத்திற்குள் அனுப்பி வைக்கவும், வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2