கேட்ட வரங்கள் அருளும் ஒன்னிபாளையம் கருப்பராய சுவாமி கோவில் வரலாறு

 Friday, February 8, 2019  08:30 PM

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூர் மாவட்டம், மத்தம்பாளையம் அருகேயுள்ள ஒன்னிபாளையம் பகுதியில் சித்தர் ஒருவர் சிவபெருமானை எண்ணி தவத்தில் இருக்கும் போது துஷ்ட சக்திகளின் இடையூறு இருந்துள்ளது.துஷ்ட சக்திகளின் இடையூறு இல்லாமல் இருக்க தனது மந்திர சக்தியால் கருப்பராய சுவாமியை எழுந்தருளச் செய்துள்ளார்.அதன்பின் சித்தர் பெருமகனார் எந்தவொரு இடையூறுஇல்லாமல் தவம் மேற்கொண்டுள்ளார்.இன்றும் அவர் இப்பகுதியில் தவம் மேற்கொண்டுள்ளார் என்பதே ஐதிகம்.

சித்தர் பெருமகனார் எழுந்தருளச் செய்த கருப்பராய சுவாமியின் மகிமையறிந்த பெரியோர்கள் பழங்காலத்தில் நான்கு பக்கமும் சுற்று சுவர் எழுப்பி,எட்டு கல் தூண்களை அமைத்து ஓடுகள் வேய்ந்தோ அல்லது பச்சை பந்தல் அமைத்தோ வழிபட்டு வந்துள்ளனர்.

இந்த சந்நிதியின் பின்புறம் மடம் ஒன்றும் பழங்காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது.மடத்தில் வந்து தங்கி இந்த கருப்பராய சுவாமிக்கு வழிபாடுகள்,பூஜைகள் பக்தர்கள் செய்துள்ளார்கள் என்பதையும்,சுற்று வட்டாரத்திலேயே இந்த கருப்பராய சுவாமி மிகவும் பிரசித்தி பெற்று அருள்மழை பொழிந்துள்ளார் என்பதையும் நாம் இத்தலம் வந்தால் உணர முடியும்.பிற்காலத்தில் வழிபாடுகள் குறைந்து இருந்துள்ளது.

இந்த ஊரில் கருப்பராய சுவாமியின் ஒரு சில பக்தர்களும்,ஒன்னிபாளையம் - கோவில்பாளையம் சாலையில் போக்குவரத்து அதிகமான பின்னர் கருப்பராய சுவாமியை தங்களது குல தெய்வமாக கொண்டவர்களும் இந்த கருப்பராய சுவாமியை வழிபட்டு வந்தனர்.

சித்தர்கள் சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு,தியானித்து தரிசனம் செய்து,ஆத்ம சக்தியை எழுப்பி,செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும்.இப்பகுதியில் தவமிருக்கும் சித்தர் பெருமகனார் சிவனையே நினைத்துக் கொண்டிருப்பதை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்,அவருக்கு காவல் புரியும் இந்த கருப்பராய சுவாமிக்கு பழமையான வில்வ மரம் பச்சை பந்தல் போட்டுள்ளதோ என தெய்வீகச் சிலிர்ப்புடன் எண்ணத் தோன்றுகிறது.

கருப்பராய சுவாமி தலத்திற்கு ஓடுகளாலும்,பச்சை பந்தலாலும் மேற்கூரை இல்லையென்றாலும்,வில்வத்துடன் காட்டு எலுமிச்சையும் தல விருட்சங்களாகி கருப்பராயருக்கு நிழல் தருவது இத்தல சிறப்பாகும்.

Vanavil New1

கிழக்குத் திசை பார்த்துள்ள இந்த ஆலயத்திற்கு செல்லும் முன் நாகர் திருமேனியின் தரிசனம் கிடைக்கின்றது.இவ்வாலயத்தின் எதிர்புறம் மூன்று கல் ஊஞ்சல்கள் உள்ளது.வடக்கு திசை நோக்கி சுவாமியின் குதிரை வாகனம் உள்ளது.மூலவர் அருள்பாலிக்கும் சந்நிதியில் நான்கு படியேறிச் சென்றால் கருப்பராய சுவாமியின் தரிசனம் கிடைக்கின்றது.

கருப்பராய சுவாமி நின்ற கோலத்தில் கம்பீர உருவம்,தலைப்பாகை, இடைக்கச்சை,உருட்டும் விழிகள்,முறுக்கிய மீசை மற்றும் ஓங்கிய வலது கையில் அரிவாளையும்,இடது கையில் கதாயுதத்தையும் வைத்தவாறு அருள்புரிகிறார்.

சித்தரின் தவத்திற்கு துஷ்ட சக்திகளின் தடையில்லாமல் காத்து வரும் இந்த கருப்பராய சுவாமி வேண்டிடுவோரை எந்த தீங்கும் அண்டாது காத்தருள்வார் என்பதும்,நீங்கள் மனதில் நினைக்கும் தடைபட்ட நற்காரியங்கள் தடையின்றி நடந்தேற துணையிருப்பார் என்பதும்நம்பிக்கை.

இவரின் வலதுபுறத்தில் கன்னிமார் சாமி,இடதுபுறத்தில் தல விருட்சத்தையடுத்து சுதை வடிவில் தன்னாசியப்பர் மற்றும் கிராமத்து சிறு தெய்வத்தின் தரிசனம் கிடைக்கின்றது.இந்த ஆலயத்தின் வடக்கிலும்,தெற்கிலும் கிராமத்துப் பெண் தெய்வங்கள் அருளுகின்றனர்.

எல்லா நாட்களிலும் இத்தலத்தில் காலை வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றன.பௌர்ணமி,அம்மாவாசை,மாத சிவராத்திரி மற்றும் வருட சிவராத்திரி நாளில் வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.இரண்டு வெற்றிலை,மூன்று பாக்கு,ஒரு எலுமிச்சை,ஒரு ரூபாய் நாணயம் மற்றும் ஒரு சூடம் வைத்து பக்தர்களாகிய நீங்களே பூஜைகள் செய்து இத்தல கருப்பராய சுவாமியை தரிசிக்கலாம்.

கோயம்புத்தூர் மாவட்டம்,காரமடையிலிருந்து ஒன்னிபாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லும் சாலையில் 7 கி.மீ., இந்த ஆலயம் உள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2