வாழைகளுக்கு, 'பஞ்சகவ்யம்' - அசத்தும் பன்னீர்மடை விவசாயி மணி

 Friday, February 8, 2019  04:30 PM

கோவை, துடியலூர் அருகே பன்னிமடையில் வசிக்கும் விவசாயி மணி, ரசாயன உரங்கள் எதுவுமின்றி, இயற்கை விவசாயம் செய்து தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட காய்கறி ரகங்களை பயிரிட்டு அசத்தி வருகிறார்.

விவசாயத்தில் ரசாயன உரங்களை தொடர்ந்து பயிரிடுவதால், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, மண்ணில் அடங்கியுள்ள நன்மை தரும் சத்துக்கள் படிப்படியாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உரங்களை இயற்கையான முறையில் தயாரித்து, பயிர்களை வளர்க்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விட கூடுதல் சத்து இருப்பதும், வேதியியல் கலப்பு இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.துடியலூர் அருகே பன்னிமடை கொய்யாமரத்தோட்டத்தில் வசிக்கும் விவசாயி மணி, 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை இயற்கை முறையில் பயிர் செய்து வருகிறார்.

விவசாயி மணி கூறியதாவது:

Vanavil New1

தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் வாழைகளுக்கு, 'பஞ்சகவ்யம்' என்ற இயற்கை திரவ கரைசலை உரமாக இடுகிறேன். இதற்காக கரும்பு சர்க்கரை, கடலை மாவு, ஆடு, மாடுகளின் கழிவுகளை குறிப்பிட்ட அளவு நீரில் கரைத்து, 2 நாள் ஊற வைத்து, அதன் கரைசலை சொட்டு நீர் பாசனம் வாயிலாக, குறிப்பிட்ட மரங்களுக்கு தேவையான அளவு செலுத்துகிறேன். இக்கரைசலுடன் எருக்கலை செடியை பொடிப்பொடியாக துண்டாக்கி, அதை, 50 கிலோ சாதாரண உப்பு மற்றும் குறிப்பிட்ட அளவு நீருடன் கலந்து செலுத்துவதால் பயிர்களுக்கு நல்ல இரும்புசத்து கிடைக்கிறது.

மேலும் இது சிறந்த பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.என்னுடைய விவசாய நிலத்தில் மண்ணின் வளத்தை காக்க, 'மூடாக்கு' என்ற இயற்கை தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறேன். இதன்படி, தென்னந்தோப்பில் கீழே விழும் தென்னை மர ஓலைகள் மற்றும் இலை, தழைகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவேன். அவை மழை, வெயில், பனிக்கு மக்கி சிறந்த உரமாக மாறிவிடும். இதனால், மண்ணில் இயற்கையாக உள்ள நுண்கிருமிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவை நீடித்து வளரும்.
எக்காரணத்தை கொண்டும் விவசாய நிலத்தில் குப்பைகளை போட்டு தீ வைத்தல் கூடாது. அவை மண்ணின் வளத்தை அடியோடு பாதித்துவிடும்.

இங்கு பயிரிட்டுள்ள வாழை கடந்த, 8 ஆண்டுகளாக வெட்டாமல் அப்படியே உள்ளது. ஒரு முறை வாழை குலை தள்ளியவுடன் வாழைக்குலையை மட்டும் வெட்டி விட்டு, வெட்டப்பட்ட வாழைக்கு பின்புறம் உள்ள ஒரு கன்றை மட்டும் அப்படியே விட்டுவிடுவேன். வெட்டப்பட்ட குலையில் உள்ள கம்பத்தில் இருக்கும் திரவச்சத்துகள் படிப்படியாக புதியதாக தோன்றும் வாழைக்கன்றுக்கு சென்றுவிடும். பழைய வாழை காய்ந்து விழுந்து மக்கிவிடும். இதனால் புதியதாக வாழைக்கன்று நட வேண்டிய அவசியம் இல்லை.இத்தொழில்நுட்ப பயன்படுத்தி பயிரிட்டுள்ள பூவன், கற்புரவல்லி, நாடன், கதளி வாழைகள் கடந்த, எட்டு ஆண்டுகாலமாக வாழைத்தோப்பில் இருந்து வருகிறது.

இங்கு இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் தேங்காய், பாக்கு, வாழைப்பழம், பப்பாளி, கருவேப்பிலை, வல்லாரை, சுக்குட்டி கீரை ரகங்கள் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.எங்கள் பண்ணையில் இயற்கை முறையில்தான் விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை எங்கள் விளைபொருட்களை பரிசோதனை செய்து சான்று வழங்கியுள்ளனர்.இவ்வாறு, விவசாயி மணி கூறினார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2