கோவையில் அழிந்து போன ஒரு கிராமத்தின் கதை - மீண்டும் குடியேற காத்திருக்கும் மக்கள்

 Friday, February 8, 2019  03:30 PM

வறட்சியும், வறுமையும் விரட்டியதால், சொந்த கிராமத்தை காலி செய்து, வயிற்று பிழைப்புக்காகவும், வேறு கிராமத்துக்கு குடும்பத்துடன் குடியேறினர். இதனால், வாக்காளர் பட்டியலில் மட்டுமே அந்த கிராமத்தின் பெயர் இருக்கிறது. ஓட்டுப்போடும் மக்கள் யாரும் அந்த கிராமத்தில் இல்லை. அந்த ஊர் வேறு எங்கும் இல்லை; நெகமம் அடுத்துள்ள வடசித்துார் குரும்பபாளையம் தான்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஒன்றியத்துக்குட்பட்ட வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் குரும்பபாளையம். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், குரும்பர் இனத்தவர் பரம்பரையாக வாழ்ந்ததால், குரும்பபாளையம் என பெயர் பெற்றது.கடந்த, 30 ஆண்டுக்கு முன், கிராமத்தில், 50 குடியிருப்புகளில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர்.

அன்றாட வாழ்க்கையை நகர்த்த, மந்தை ஆடுகள் வளர்ப்பு, கம்பளி தயாரிப்பு மற்றும் விவசாயத்திலும் ஈடுபட்டனர்.பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த கிராமம், 'கம்பளி' உற்பத்திக்கு கோவை மாவட்டத்தில் தனி மவுசு பெற்றது. இக்கிராமத்தின், கம்பளிக்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததால், கம்பளி தொழிலே முக்கியத்தொழிலாக மாறியது.

பொள்ளாச்சி, சூலுார், கிணத்துக்கடவு சந்தைகளுக்கு சென்று விற்பனை செய்வது மட்டுமல்லாமல், தலைச் சுமையாய் கம்பளியை சுமந்து கிராமம், கிராமமாக சென்று விற்பனை செய்தனர். வயதான காலத்திலும் மக்கள் ஓடி உழைத்தனர். இளைஞர்கள் படிப்புக்காகவும், மாற்று வேலைக்கும் கிராமத்தை விட்டு வெளியேறினர். மேலும், வறட்சியால் விவசாயம் அழிந்ததாலும்; வேலையின்மை காரணமாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

வறுமை காரணமாக, ஆடுகளையும் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால், வேறு வழியில்லாமல் தவித்த மக்கள், வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கையை இழந்து, மாற்று இடங்களான சுந்தராபுரம், மாச்சம்பாளையம், சூலுார், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

Vanavil New1

வேறு பகுதிக்கு சென்றதால், தற்போது கிராமம் புதர் மண்டி வெறிச்சோடி வெறும் காடாக காட்சியளிக்கிறது. சொந்த ஊரை விட்டுச் செல்ல மனமில்லாத இரு குடும்பங்கள் மட்டுமே கிராமத்தில் உள்ளன. ஒரு வீட்டில் வயதான மூதாட்டியும்; மற்றொரு வீட்டில், 50 வயதை தொட்ட டிரைவரும் வசிக்கின்றனர். கிராமத்தை காலி செய்ய மனமில்லாமல் வாழும் இரண்டு வீடுகளுக்கு, இரண்டு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன; அவை எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளன.வரலாற்று சுவடுகிராமத்துக்கு குடிநீர் மற்றும் மற்ற பயன்பாட்டுக்கு ஆதாரமாக இருந்த ஊர் பொதுக்கிணறு இன்றும் மக்கள் வாழ்ந்த கிராமம் என்பதை நினைவூட்டுகிறது.

பயன்பாடில்லாத, அந்த கிணறு புதருக்குள் மறைந்து கிடக்கிறது. கிராமத்தில் இருந்த குடியிருப்பின் சுவர்கள் முட்புதர்களுக்குள் வரலாற்று சுவடுகளாக உள்ளன.கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில், தினமும் பூஜை நடந்தது. தற்போது, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூஜை நடக்கிறது.

மக்கள் தேவைக்காக, 1986ல் அமைக்கப்பட்ட 'போர்வெல்'லில் இன்றும் தண்ணீர் உள்ளது. 'போர்வெல்' தண்ணீரை, இரண்டு கி.மீ., துாரத்தில் உள்ள வடசித்துார் மற்றும், குரும்பபாளையத்தை சுற்றியுள்ள மக்கள் பயன்படுத்துகின்றனர்.எதிர்பார்ப்பு நிறைவேறுமா?குரும்பபாளையம் கிராமம் அழிந்து போன நிலையில், அருகிலேயே புது குரும்பபாளையம் குடியிருப்பு உருவாகி வருகிறது. இதில், 25 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய குடியிருப்புகளுடன் கிராமம் உருவாவதை பார்க்கும், பழைய குரும்பபாளையத்தில் வசித்த மக்கள், மீண்டும் பழைய இடத்தில் குடியேற ஆர்வமாக உள்ளனர். இதற்கான முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.சொந்தமாக இடமும், வீடும் இல்லாமல் தனியார் இடத்தில் வசிக்கும் அவர்கள், முன்னோர் வாழ்ந்த இடத்தில் வீடு கட்டி வசிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளனர்.

இதற்காக, வி.ஏ.ஓ., விடம் பலமுறை மனு கொடுத்தும், இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை இல்லை. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2