கொங்குநாட்டு கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் - ஒரு சகாப்தம்

 Thursday, February 7, 2019  05:39 PM

அந்தக்கால நாடகமேடை சக்கரவர்த்தி எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்த கானக்குயில், அவர் மறைவுக்குப் பிறகு பாடுவதையும், நடிப்பதையும் நிறுத்தியிருந்து ஜெமினி ஒளவையார் படத்தின் மூலம் வெளிவந்த இந்த இசையரசி, ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விடுதலைப் போராட்ட வீராங்கனையைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிறிது பார்ப்போம்.

காவிரி வளம் விரிக்கும் கொடுமுடி எனும் சிற்றூரில் பிறந்தவர் கே.பி.எஸ். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது தாய்மாமனான மலைக்கொழுந்து என்பவரின் ஆதரவில் வளர்ந்தார். சின்னஞ்சிறு சிறுமியாக இருந்தபோதே தன் வயதொத்த சிறுவர் சிறுமியரோடு விளையாடப் போகுங்கால் இவர் பாடும் பாட்டுக்களைக் அனைவரும் விரும்பிக் கேட்டு பாராட்டுவராம். இவர் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது பாடிய பாடலொன்று, அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேலு நாயர் எனும் நாடகக் கம்பெனி முதலாளியின் மனதைத் தொட்டது.

உடனே மலைக்கொழுந்துவிடம் பேசி கே.பி.எஸ். ஐ கும்பகோணத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த வேலு நாயரின் நாடகக் குழுவில் குழந்தை நட்சத்திரமாகச் சேர்த்துக் கொண்டார். அங்கு நாடகங்களில் நடித்தும் பாடியும் வந்த இவருடைய புகழ் நாலா திசைகளிலும் பரவியது. இவரது ஏழ்மை நிழல் விலகி வளமையின் ஒளி இவர் மீது படிந்தது. ஊருக்கு வெளியே ஏழ்மைக் குடிலில் வாழ்ந்த இவர், கொடுமுடியின் நடுநாயகமாக ஒரு வீட்டை வாங்கி குடியேறினார்.

இவரது பாட்டுக்களும், குரல் வளமும், மைக் வசதி இல்லாத அந்தக் காலத்தில் கூட்டத்தினர் அனைவரும் கேட்கும் வண்ணம் இவர் பாடும் திறமையும் தமிழ்நாடெங்கும் பரவியது. ஆங்காங்கே இவரது நாடகங்களைப் பார்க்கவும், இவரது பாடல்களைக் கேட்கவும் மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டது. சினிமாவின் தாக்கம் ஏற்படாத அந்தக் காலத்தில் தென் மாவட்டங்களிலும், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் இவரது நாடகங்களுக்கு அதிக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தன. இவர் நடித்துப் பாடிய ஸ்ரீ வள்ளி, நந்தனார் போன்ற நாடகங்கள் பல நாட்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றன.


Vanavil New1
அதே காலகட்டத்தில் நாடகங்களில் உச்ச ஸ்தாயியில் பாடி மக்களைக் கவர்ந்த எஸ்.ஜி.கிட்டப்பா, தன்னைப் போலவே பாடி நாடக உலகின் முடிசூடா அரசியாக விளங்கிவந்த கே.பி.எஸ்.ஐப் பற்றிக் கேள்விப்பட்டார். இவர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். அன்றைய நாடக உலகின் சக்கரவர்த்தி இவர்தான். கிட்டப்பா, செல்லப்பா போன்றவர்கள் அன்றைய நாடக உலகில் பெயர் பெற்று விளங்கினார்கள். இந்த இரு நாடக உலகின் சிகரங்கள் 1924இல் திருமண உறவின் மூலம் ஒன்று கலந்தன. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்த பிறந்து அது இறந்து போயிற்று.

திருமணமாகி எட்டு ஆண்டுகளில் எஸ்.ஜி.கிட்டப்பா இறந்து போனார். கானக்குயில் தனது 24ஆம் வயதில் விதவையானார். எனினும் அன்று தொடங்கி அவர் காலமான 72ஆம் வயது வரை சுமார் ஐம்பது ஆண்டுகள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன்னிரு கண்களாகக் கொண்டு நாட்டுக்கு உழைத்து வந்தார். இவர்களுடைய நாடகங்கள் வெரும் புராணக் கதைகளாக இருந்தபோதும், அதன் ஊடே வரும் தேசியக் கருத்துக்கள் பார்ப்போர் மனதில் விடுதலை உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதாக இருந்தது.

அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் கொடுமுடி சென்று கே.பி.எஸ்.ஐ சந்தித்து கூட்டங்களுக்கு அழைத்திருக்கிறார்கள். 1937இல் நடந்த தேர்தலில் இங்கு பலம் பொருந்தியிருந்த ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது கொடுமுடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீரர் சத்தியமூர்த்தி பேசுவதற்கு முன், கே.பி.எஸ். தன் வெண்கலக் குரலில் 'ஓட்டுடையார் எல்லாம் கேட்டிடுங்கள்' என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம், கூட்டம் தாங்கமுடியாத அளவுக்குச் சேர்ந்து விட்டது.

'சிறைச்சாலை என்ன செய்யும்?' எனும் இவரது பாடலும், 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' எனும் பாடலும் மிகப் பிரசித்தம். தீரர் சத்தியமூர்த்தி சென்னையில் தேர்தலில் நின்று வெற்றிபெற கே.பி.எஸ்.சின் பாடல்கள்தான் துணை நின்றன. கணவர் இறந்த பிறகு பாடுவதை நிறுத்தியிருந்த கே.பி.எஸ். மகாத்மா காந்தி அவருடைய வீடு தேடிச் சென்று கேட்டுக் கொண்ட பிறகு, மீண்டும் பாடி தேச சேவையில் ஈடுபட்டார். இவரை 'கொடுமுடி கோகிலம்' என்று வர்ணித்து தனது திராவிட நாடு பத்திரிகையில் புகழ்ந்து எழுதினார் அறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் காமராஜ் காலத்தில் கே.பி.எஸ். சென்னை சட்ட மேல் சபை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் இருந்தார். இந்த 'இசைப் பேரரசி' மறைந்து போனாலும், இவர் விட்டுச் சென்ற இவரது பாடல்களும், இவர் ஊட்டி வளர்த்த தேசிய உணர்வுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க கே.பி.எஸ்.புகழ்!


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2