உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் போடுங்க


Source: maalaiamalar
 Thursday, January 31, 2019  11:51 AM

வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது.

இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் கிரிம்களும் கிடைக்கின்றன. வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும்.


Vanavil New1
வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2