கோவையில் அனைவரும் சென்று பார்க்கவேண்டிய சில சுற்றுலா தளங்கள் - ஒரு பார்வை

 Wednesday, January 30, 2019  06:30 PM  4 Comments

மூச்சுக்கு மூச்சு வாங்க என்று பரிவு காட்டும் மரியாதை தெரிந்த கொங்கு நாட்டுத் தலைநகரம். சாரல் காற்றின் இதம் தரும் பருவநிலை. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரம். தென் இந்தியாவின் மான்செஸ்டர். கொங்குநாடு சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கி.பி. 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் வந்தது.

அதன்பின் பொறுப்புக்கு வந்த கோவன்புத்தூர் என்னும் சிற்றரசன் காடு மலிந்திருந்த இவ்வூரை திருத்தி அழகிய நகராகச் செம்மைப்படுத்தினான். அவன் பெயரிலேயே கோயம்புத்தூர் என்று மக்கள் அன்போடு அழைத்ததாக ஒரு வரலாறு உண்டு. முதன் முதல் இந்நகரத்திற்கு கி.பி. 1888 இல் தான் ஒரே ஒரு துணி ஆலை வந்தது. இன்று எங்கு நோக்கினும் ஆலைகள். கோயம்புத்தூர் சுருக்கமாக கோவை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனைமலை விலங்குகள் சரணாலயம்

காட்டில் விலங்குகளைப் பார்ப்பதற்கும், சர்க்கஸ் கூண்டில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனைமலைக்குச் சென்றால் அதை நீங்கள் உணர்வீர்கள். யானை, காட்டெருது, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப் பறவைகள், எறும்புத் தின்னி போன்றவற்றை இங்கே காணலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் 1400 மீட்டர் உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பளவில் பொள்ளாச்சியின் அருகே இந்தச் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில் முதலைகள் ஏராளம். குன்றுகள், அருவிகள், தேக்கு மரக்காடுகள், தோப்புகள், பண்ணைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் என இயற்கை எழில் கைகுலுக்கிக் கொள்ளும் அழகின் தாய்வீடு. டாப்ஸ்லிப் பகுதிக்கும் சுற்றுலாப் பயணிகள் வேன் அல்லது யானை மீது உல்லாச சவாரி சென்று வரலாம். ஆனைமலை கடவுளே நமக்காக அருளிய அழகின் மலை.

அவினாசி கோயில்

தென்னாட்டுக் காசி என்றழைக்கப்படுகிறது அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம். இது கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கண்ணைக் கவரும் சிற்பங்கள் நிறைந்த இத்திருக்கோயில் முற்காலத்தில் பெரிய கோயில்கள் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கோவை மாவட்டத்தின் மற்றக் கோயில்களைவிடப் பெரியது.

பூசை நேரம்:- கணபதிஹோமம் - காலை 5.30. மூலவர் அபிஷேகம் - காலை 6.30 மற்றும் மாலை 6.30 மணி. தொலைபேசி - 04296-273113.

ஈச்சனாரி விநாயகர் கோயில்

விநாயகர் வீற்றிருக்கும் தெய்வீகம் ததும்பும் ஆலயம். கோவையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இறையருள் வேண்டும் பக்தர்கள் விரும்பிச் செல்லும் விநாயகர் கோயில்.

அமைவிடம் - அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், பொள்ளாட்சி பிரதான சாலை. கோயம்புத்தூர் - 641201. தொலைபேசி - 0422 - 2672000.

காரமடை ரெங்கநாதர் கோயில்

கோயம்புத்தூர் நகரின் இரண்டாவது பழமையான கோயில். விஜயநகர அரசர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ரெங்கநாகர் பள்ளி கொண்டு இருக்கிறார். தொலைபேசி - 04254-272318.

குழந்தை ஏசு தேவாலயம்

கிறிஸ்தவர்களின் வணக்கத்திற்குரிய பெருமைமிகு தேவாலயம். கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில் கோவைப்புதூரில் அமைந்துள்ளது. வியாழன் தோறும் இந்தத் தேவாலயத்தில் நிகழும் கிறிஸ்தவ வழிபாடு பக்தர்களிடம் பிரபலம். தொலைபேசி - 0422 - 2607157.

கோட்டை மேடு மசூதி

இஸ்லாமிய கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளைக் கொண்ட மசூதி. கோவை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு கோவையில் எழுந்த முதல் மசூதி என்ற பெருமையும் உண்டு. இதன் ஒரு பிரி வாக உருது கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி - 0422-2397050.

மருதமலைக் கோயில்

மருதமலை மாமணியே முருகையா! முருகன் என்றால் அழகு. குழந்தையின் வசீகரம் சொட்டும் அழகுடன் மருதமலையில் வீற்றிருக்கிறான் முருகப்பெருமான். கோவை ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. முருக பக்தர்களின் மனம் நிறைந்த முருகாலயம் இது.

அமைவிடம் - அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில். மருதமலை, கோவை - 641046. தொலைபேசி - 0422-2422490.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

மிகப் பழமையான கோயில் இது. சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்டது. இங்கு பங்குனி உத்திரத் திருநாள் சிறப்புக்குரியது. இத்திருக்கோயில் கோவையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

அமைவிடம் - சிறுவாணி பிரதான சாலை, பேரூர், கோயம்புத்தூர் - 641 010. தொலைபேசி - 0422-2607991. பூஜை நேரம் காலை 7.30-12.00 மாலை 7.30 மணி வரை. வழிபாட்டு நேரம் காலை 6-1 மாலை 4-8 மணி வரை.

மாசாணியம்மன் கோயில்

இங்கே ஒரு சுவாரசியமான நம்பிக்கை இருக்கிறது. பொள்ளாச்சிக்கும் பாலக்காட்டுக்கும் இடையில் உள்ளது மாசாணியம்மன் கோயில். இந்த அம்மனுக்கு மிளகாய்ச் சாந்து பூசினால் தொலைந்துபோன விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கொங்கு நாட்டு திருப்பதி

கொங்கு நாட்டின் புகழுக்குரிய ஒப்பற்ற புனிதத் தலம் நைனார்க்குன்று. இதை மக்கள் கொங்கு திருப்பதி என்று அழைக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷமானவை. அன்று வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். 'கோவிந்தா கோபாலா' என்ற குன்றில் துதிபாடி வந்து பக்திப் பெருக்குடன் ஆலயத்தில் வழிபடுவது தொன்று தொட்டு தொடரும் பழக்கம்.

வைதேகி அருவி

நீர் கொட்டிக் கொண்டே இருக்கும் நிரந்தர அருவியை எங்கே பார்த்திருக்கிறீர்கள்? அது இதுதான். கோவையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் நரசிபுரம் என்ற கிராமத்தில் உள்ளது. இயற்கையின் பாடலை ரசிக்க நினைப்பவர்கள் இங்கே செல்லலாம்.

தியானலிங்கம்


Vanavil New1
யோகி ஜக்கி வாசுதேவ் மற்ற யோகிகளுடன் சேர்ந்து உருவாக்கியதே இந்தத் தியான லிங்கம். இதிலிருந்து உருவாகும் சக்திமிகு அதிர்வலைகள் யோகா பயிற்சியில்லாத மனிதர்களுக்கும் அந்தப் பேரனுபவத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. பேராசை, அச்சம், பகை எதுவுமற்ற புதிய மனவுலகை அறியும் உயர் மகிழ்ச்சியைத் தருவதாகக் கருதப்படுகிறது. தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள காந்தப்புலத்திலிருந்து எழுந்து வரும் சக்தி, வாழ்க்கைத் தளையிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று நம்பப்படுகிறது. நம்பியவர்கள் பேரருள் அடைகிறார்கள்.

அமைவிடம் - ஈசா யோகா மையம், வெள்ளியங்கிரி அருவி, கோயம்புத்தூர் - 641 114. நேரம் காலை 6 இரவு 8 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 0422 - 2615345.

பொள்ளாச்சி

தென்னந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள் நிரம்பி வழியும் மலையூர். மலைகளால் சூழ்ந்த மனத்திற்கனிய இயற்கையின் ஆட்சி பொள்ளாச்சி. தமிழ்த் திரையுலகின் திறந்தவெளி படப்பிடிப்பத்தளம் சந்தைக்குப் புகழ்பெற்ற நகரம். பரம்பிக்குளம், ஆழியார் அணைக்கட்டுக்குச் செல்லும் வழியில் கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்நகரில் மாரியம்மனுக்கும், சுப்பிரமணியருக்கும் திருக்கோயில்கள் உள்ளன. சுப்பிரமணியர் கோயிலின் வளைந்து நெளியும் பாம்பு, யாழி, ராசி மண்டலச் சிற்பங்கள் புகழ்பெற்றவை. பொள்ளாச்சிக்குப் புறப்பட்டு விட்டீர்களா?

பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு

பார்வையின் நீளம் செல்லும் வரை தேங்கி நிற்கும் நீரைப் பார்ப்பதே பேரழகு. தமிழகத்தின் பிரபலமான அணைக்கட்டுகளில் இது குறிப்பிடத்தக்கது. ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு ஆறுக்கும் மேற்பட்ட ஆறுகளை உள்ளிணைக்கும் வரிசைத் தொடரான அணைக்கட்டுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடலைத் தேக்கிவைத்த அதிசயம்தான் அணைகள்.

திருப்பூர்

உலகின் தொழில் நகரங்களுக்கான வரைபடத்தில் இடம்பெற்ற ஜவுளிநகரம். கோவை மாவட்டத்தின் வேலை வாய்ப்புகள் மலிந்த முக்கிய நகரம். உள்ளாடை மற்றும் இதர மென்துணி ரகங்கள் சர்வதேச நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது கோவையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இங்குள்ள திருப்பூர் தமிழ்ச்சங்கம் சிறந்த நூல்களுக்கு விருதளித்து எழுத்தாளர்களை கௌரவிக்கிறது.

சிறுவாணி அருவி

சிறுவாணி நீர் சுவைமிக்கது. உலகச் சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள சிறுவாணி ஆறு இங்குதான் அருவியாகத் தொடங்குகிறது. கோவை நகரிலிருந்து 37 கி.மீ. தொலைவில் கண்களுக்குக் குளிர்ச்சியான சூழலில் இந்தக் கோவையின் குற்றாலம் உள்ளது. இதன் பரந்து விரிந்த சுற்றுப்புறக்காட்சி பார்க்கப் பார்க்க வசீகரம் பொங்கும். இன்னமும் நாம் பார்க்காமல் இருந்தால் எப்படி?

திருப்பூர் குமரன் நினைவாலயம்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் கொடிகாத்த குமரனின் பெயருக்குத் தனி முக்கியத்துவம் இருக்கிறது. அவரது நினைவைப் போற்றும் திருத்தலம் இது. திருப்பூர் குமரன் கொடிக்காக உயிர்த் தியாகம் செய்த நாள் ஜனவரி 11, 1932. அந்த மாமனிதருக்கு மரியாதை செய்வதற்காக ஏப்ரல் 7 1991 இல் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டது.

டாப்ஸ்லிப்

ஆனைமலைக் குன்றின் உச்சியில் ஒரு சித்திரம்போல அமைந்திருக்கிறது டாப்ஸ்லிப். பூமிப் பரப்பின் இயற்கையெழிலை ரசிக்க இதைவிட வேறிடம் இல்லை. பொள்ளாச்சியிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் கோவையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு தங்குவதற்கு சுற்றுலா மாளிகைகளும் உள்ளன.

திருமூர்த்தி கோயில்

திருமூர்த்தி மலையடிவாரத்தில் உள்ள கோயில் இது. பழனி, கோவை நெடுஞ்சாலையில் உடுமலைப் பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இதனருகே திருமுர்த்தி அணைக்கட்டும், அமரலிங்கேஸ்வரர் ஆலயமும், வருடம் முழுவதும் கொட்டும் அருவியும் உள்ளன.

முதலைப்பண்ணை

ஒரு முதலையைப் கண்டாலே படை நடுங்கும். ஒரு பண்ணையையே பார்த்தால் எப்படித் தோன்றும்? அமராவதி அணைக்கட்டில் இருக்கிறது இந்த முதலைப் பண்ணை. உடுமலைப்பேட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள இந்தப் பகுதி மாவட்ட சுற்றுலா மையமாகவும் வளர்ந்து வருகிறது. இங்கு செல்ல உடுமலைப்பேட்டையிலிருந்து தனி பேருந்துகள் இயங்குகின்றன.

வால்பாறை

மேற்குத் தொடர்ச்சி மலையில் தவழும் பச்சைக் குழந்தை வால்பாறை. தேயிலைத் தோட்டங்கள், தனியார் பண்ணைகள் என பசுஞ்சோலையாக ஒரு வண்ணச் சித்திரம் போன்றது. அட்டகட்டி என்ற அலைச்சாரல் கிராமத்திலிருந்து பார்த்தால் பசுமைப் பள்ளத்தாக்கும் மற்ற இடங்களும் எழில் கொஞ்சும். இப்பேரழகைச் சொல்வதைவிட, நேரில் ரசிப்பதன் அனுபவம் ஒரு தனி ரகம். கோவையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது இது.

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்

வேறெங்கும் காணக் கிடைக்காத பஞ்சலிங்க தரிசனம் இங்கு கிடைக்கும். சிவபெருமானின் ஐந்து முகங்களைக் குறிப்பதுபோல ஐந்து மலைகள் சூழ இக்கோயில் அமைந்துள்ளது. இது பக்தர்களுக்கு பக்திப் பரவசத்தைத் தரும். கோவையிலிருந்து சிறுவாணிக்குச் செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் இந்த ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது.

அமைவிடம்:- பூண்டி, கோயம்புத்தூர் - 641010. தொலைபேசி - 0422 - 2651258.

உடுமலை நாராயணகவி நினைவிடம்

திரைப்படப் பாடல்களில் சமூக விழிப்புணர்வை ஊட்டிய மகா கவிஞர் உடுமலை நாராயணகவி. தமிழ்த் திரைப்பட உலகின் புகழ்பெற்ற முன்னோடி கலைஞர் இவர். செப்டம்பர் 25, 1899 இல் பிறந்தார். இவருக்குச் சொந்த ஊரில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் இது. இங்கு கவிஞரின் வாழ்க்கை வரலாறும் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்குக் கலையை பொன்னாக மாற்றியவர் உடுமலை நாராயண கவி.

ஜி.டி. நாயுடு தொழில்துறைக் கண்காட்சி

கோவையில் வாழ்ந்த மேதை ஜி.டி. நாயுடு. அவரது புதுமையின் கண்டுபிடிப்புகள் ஆச்சரியமுட்டுபவை. இந்த கண்காட்சி ஜி.டி. நாயுடு நிறுவியது. அவருடைய அறிவியல் ஆராய்ச்சியை சிறப்பிக்கும் பொருட்டு அவருக்கே இக்கண்காட்சி காணிக்கையாக்கப்பட்டுள்ளது. நகரப் பேருந்தில் ஜி.டி. நாயுடு கண்காட்சி என்று கேட்க வேண்டும்.

ஆழியாறு அறிவுத் திருக்கோயில்

'வாழ்க வளமுடன்' என்ற வாசகத்தை உலகம் முழுவதும் பரப்பி உலக அமைதிக்குப் பாடுபட்ட அருட் தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டது. இக்கோயில் ஆழியாறு அணைக்கட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


sairam sairam commented on 5 month(s) ago
GD CAR MUSEUM
Giridharan Giridharan commented on 5 month(s) ago
CBE to valparai - 110 kms CBE to top slip - 77 kms
Mahendran commented on 5 month(s) ago
please give bus details in narasipuram vaidheki falls
Nammacoimbatore Admin commented on 5 month(s) ago
தற்போது வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளார்
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2