மரங்களை எப்படி நடுவது எங்கு நடுவது-

 Wednesday, June 21, 2017  06:39 AM

மரம் வளர்த்து மனிதம் வளர்ப்போம்

மரம் நடுவதற்கு மூன்று நான்கு தினங்களுக்கு முன்கூட்டியே இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் குழி தோண்ட வேண்டும். குழிகள் நெருக்கமாக இருக்க கூடாது. பல மரங்களை ஒரேயிடத்தில் நெருக்கி வளர்ப்பது கூடாது. கன்றுகள் வளர்ந்து மரமாகும் போது அவற்றின் பருமனை மனதில் வைத்துக் கொண்டு குழி தோண்ட வேண்டும். குட்டையான மரங்களாக இருந்தால் 15 அடிக்கு ஒன்றாகவும், பெருமரங்களை 30 அடிக்கு ஒன்றாகவும் நடலாம். குழிகளை நான்கடி சதுரமாகவும், ஆழமாகவும் தோண்ட வேண்டும்.

பொதுவாக, மரங்களை நட மார்ச் மாதவாக்கில் குழிகளை தோண்டி ஏப்ரல் மே மாதங்கள் வரை குழியை காய போட்டு வைக்க வேண்டும். ஜுன் மாதத்தில் நல்ல எருவையும், மண்ணையும் ஐந்துக்கு ஒன்றாக கலந்து தரை மட்டம் வரை குழிகளை நிரப்ப வேண்டும். புது எருவிற்கு கரையான்கள் வந்து விடும். எனவே பழைய உரம் தான் நல்லது. குழியில் தோண்டிய மண், சுண்ணாம்பு சத்து நிறைந்ததாக இருந்தால் அதை அப்புறப்படுத்தி வேறு நல்ல மண்ணைக் கொட்ட வேண்டும். இரண்டு தடவை நல்ல மழை பெய்த பின்பு குழி மண் தானே அழுந்தி விடும். அப்போது குழிகளில் மரக்கன்றுகளை நட்டால் அவை நன்கு வளரும்.

செழித்து வளர

நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் கன்றுகளை பிப்ரவரி மாதத்தில் நடுவது நல்லது. நீர் பாயும் வசதியுள்ளாத இடங்களில் ஜுலை மாதக்கடைசியில் மரக்கன்றுகளை நடலாம். சிறிய தொட்டிகளில் இருக்கும் மரக்கன்றுகளை வாங்கி வந்தால், தொட்டியிலிருந்து கன்றுகளை பிடுங்கும் போது வேரைச்சுற்றியுள்ள மண்ணை கலைக்கக்கூடாது. ஒடிந்து போன கிளைப்பகுதிகளையும், அறுந்து போன வேர்ப்பகுதிகளையும் நீக்கி விட வேண்டும். கன்று நட வேண்டிய குழியில் முதலில் ஓர் ஆழமான துளை போட வேண்டும். வேர்கள் மடங்காமலும், துளையில் கன்றை நடும் பொழுது வேர்ப்பகுதி முழுவதும், குழியின் தரைமட்டத்திற்குள்ளாக இருக்கும் படி வைக்க வேண்டும். மிக ஆழமாக வைப்பது கூடாது. இப்படி கவனமாக நடாவிட்டால் மரக்கன்று நசித்து போகும். அல்லது பட்டு போகும்.


ஒரே குழியில்

கன்று நட்டவுடன் நிறைய தண்ணீர விட வேண்டும். ஒன்று பட்டு போனாலும் இன்னொன்று வளர்ந்து விடும் என்ற எண்ணத்தில் ஒரே குழியில் இரண்டு மரக்கன்றுகளை நடுவது கூடாது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு உள்பட்ட கன்றுகள் சில நாட்களில் குழியில் தரித்து விடும்.கன்று நட்ட சில நாட்களில் குழிகளில் புல் முளைக்க தொடங்கும். இதனால் குழிகளை ஆறப்போட வேண்டியது அவசியம். இலையுதர் மரக்கன்றுகள் முதலில் தழைமரக்கன்றுகளை காட்டிலும் புல் வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதிலும் பழமரங்களை குழிகளில் தோன்றும் புல் நசிக்க செய்து வளரவிடாமல் செய்துவிடும்.

களை கொத்து கொண்டு புல்லை வெட்டி எடுத்து விட வேண்டும்.

நீர் ஊற்ற

நமது நாட்டில் உள்ள மரங்கள் பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் ஆகிய வெப்ப நாளிலும், ஜுலை முதல் செப்டம்பர் ஆகிய தட்பவெப்ப நாளிலும் அதிகமாக வளர்கின்றன. அதனால் மார்ச் முதல் ஜுன் வரை குறைந்தது ஐந்தாறு தடவையும் இவற்றிற்கு நீர் விட வேண்டும். ஒவ்வொரு தடவையும் குழி நிறையும் அளவு நீர் ஊற்ற வேண்டும்.

மரத்தின் வேர்ப்பகுதிக்கு நீர் சென்று சேராவிட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். தண்ணீர் பாய்ச்சுவதால் மரங்கள் தழைத்து வளரும். புது இலைகள் விடும். அப்போது நீராவிக் போக்கு அதிகமாகும். எனவே, நீர்ப்பாசன வசதியுள்ளாத இடங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு மார்ச் மாத்தில் அதிகமான நீர் விடாமல் இருப்பதே நல்லது. அதிகம் நீர் விடும் போது நீராவிப் போக்கு மிகுந்து கன்று பட்டு போய் விடும்.

கொழு கொம்பு

இரண்டாவது ஆண்டில் கன்றுகள் கிளைத்து மரமாக நன்கு வளரும் போது ஒரு செழிப்பான கிளையை வைத்துக் கொண்டு மற்றக்கிளைகளை வெட்டிவிட வேண்டும். அப்படி வெட்டப்பட்ட வெட்டு வாயில் உடனடியாக தார் வைத்து அடைத்து விட வேண்டும். மரம் நேராக வளர , மூங்கில் அல்லது நேரான கழியை கொண்டு கொழுகொம்பாக இணைத்து, பழந்துணியை இடையில் கொடுத்து வாழை நார் கொண்டு கட்ட வேண்டும். கம்பி கொண்டு கட்டுவதும் ஆணி அடிப்பதும் மரத்திற்கு ஊறு செய்யும். அதன் மூலமாக காளான் உட்சென்று மரத்தை அழித்து விடும். மரம் நிலைத்து நன்கு வளர்ந்த பின்னர் கொழு கொம்பை அகற்றி விட வேண்டும்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் இளமரங்களை காப்பதில் தொல்லை இல்லை. பொது இடங்களில் உள்ள மரங்களை காப்பது தான் சிறிது கடினம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp1
Website Square Ad spp3
Website Square Vanavil2
Website Square Ad spp2
Website Square Vanavil 1