பூஞ்சோலையான சிறைச்சாலை! - அசத்தும் உடுமலை கிளைச் சிறைக்காவலர்கள்

 Tuesday, January 29, 2019  02:30 PM

சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளால் தண்டனை பெற்றவர்கள், தவறுகளுக்காக வருந்தும் இடமாகவும், தீர்ப்புகளுக்காக காத்திருப்போர், பாதுகாப்புடன் தங்கியிருக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் உருவைக்கப்பட்டவை சிறைச்சாலைகள்.

ஆனால், தற்போதைய நிலையில் பெரும்பாலான சிறைச்சாலைகள் அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா என்பது கேள்விக்குறியே?ஆனால், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இயங்கி வரும் கிளை சிறைச்சாலை, வழக்கமான சிறைகளில் இருந்து மாறுபட்டு, தமிழகத்துக்கே முன்மாதிரி சிறையாகத் திகழ்வது வியப்பை அளிக்கிறது.

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள ஒருங்கிணைந்த வட்டாட்சியர் அலுவலகம், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து அரசுத் துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், அந்தக் காலத்திலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இந்தக் கட்டிடம். தற்போதும் அது அரசு அலுவலகங்கள் செயல்படும் கட்டிடமாக உள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம், நடுவர் நீதிமன்றம், சார்நிலைக் கருவூலம், கிளைச் சிறைச்சாலை ஆகியவை முன்பு இங்கு ஒரே இடத்தில் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இடநெருக்கடி காரணமாக சார்நிலைக் கருவூலத்துக்கு தனி கட்டிடம் கட்டப்பட்டது.

1865-ம் ஆண்டில் 12,800 சதுர அடி பரப்பளவில் கிளை சிறைச்சாலைக் கட்டிடம் கட்டப்பட்டது. மொத்தம் 20 அறைகள் கொண்ட இந்த கிளைச் சிறையில் 40 விசாரணைக் கைதிகளை பாதுகாக்க முடியும். 1981-ம் ஆண்டு வரை வட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கிளைச் சிறைச்சாலைக் கட்டிடம், பின்னர் முறைப்படி சிறைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அமைந்துள்ள நடுவர் நீதிமன்றத்தின் உட்புறமாகவே கைதிகளை கிளை சிறைக்குக் கொண்டு செல்லும் வகையில் வழி உள்ளது. ஆனால், தற்போது வருவாய் துறையின் பல்வேறு பிரிவுகள் இப்பகுதியில் இயங்குவதால், நேரடியாக கைதிகளை சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது.உடுமலை கிளைச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக எஸ்.அண்ணாதுரை பொறுப்பேற்ற பின்னர், இங்கு பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

விசாரணைக் கைதிகளில் பலர் மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதைப்போக்க, விசாரணைக் கைதிகளை அன்பாகவும், அனுசரணையாகவும் நடத்தப்படும் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஜாமீன் எடுக்க ஆளின்றி, குறிப்பிட்ட காலத்தைக் கடந்தும் சிறையில் வாடுவோரின் உதவிக்காக, இலவச சட்ட உதவி மையம் மூலம் வழிகாட்டப்படுகிறது. படிப்பதற்கு பயனுள்ள நூல்கள் வழங்கப்படுகின்றன.


Vanavil New1
தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கப்பட்டு, அதற்கான விளக்கம் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் தவறே செய்திருந்தாலும், வெளியே செல்லும்போது மீண்டும் தவறிழைத்து, சிறைக்கு வராத வகையில் மன மாற்றத்தை ஏற்படுத்துவதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர் சிறைக் காவலர்கள்.

வர்ணம் பூசிய காவலர்கள்

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த சிறைக் கட்டிடத்தை, கண்காணிப்பாளரின் வழிகாட்டுதல் படி சிறைக் காவலர்கள் ஒன்றிணைந்து, சொந்த முயற்சியில் சீரமைத்துள்ளனர். டெல்லி செங்கோட்டையின் நிறத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சிறைச் சாலைக் கட்டிடத்துக்கு வர்ணம் தீட்டியுள்ளனர்.

உட்புறச் சுவர்களுக்கு வெள்ளையடித்தும், தூண்களுக்கு வர்ணம் பூசியும் அழகுபடுத்தியுள்ளனர். சிறையின் வெளிப்பகுதி புதர் மண்டியும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் இருந்தது. இந்தப் பகுதியைச் சீரமைத்து, இயற்கை முறையிலான காய்கறிகளைச் சாகுபடி செய்யும் தோட்டமாக மாற்றியுள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தினமும் பணி முடிந்த பிறகு, சீரமைப்புப் பணிகளுக்காக சில மணி நேரத்தை செலவிட்டு, இப்பணிகளை சிறைக் காவலர்கள் நிறைவேற்றியுள்ளனர். சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகளை சிறைக் காவலர்களே செய்துள்ளனர். சிறைச்சாலையின் முகப்பில் அழகிய பூக்கள் நிறைந்த மினி கார்டன் அமைத்து தூய்மைச் சிறையாக மாற்றியுள்ளனர். சிறையில் உள்ளே நுழைந்ததும் வரவேற்கிறது திருவள்ளுவரின் ஆளுயரப் படம்.

இங்கு விசாரணைக் கைதிகளுக்கு தினமும் காலை, மதியம், இரவு வழங்கப்படும் உணவு விவரம், பார்வையாளர்களுக்குத் தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. தினசரி சிறையில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது தொடர்பான பட்டியலும் உண்டு. சிறைக்கு புதிதாக வரும் அதிகாரிகள், உடுமலைப்பேட்டையை தெரிந்து கொள்ளும் வகையில், உடுமலை, அமராவதி, திருமூர்த்தி, மறையூர், வால்பாறை, டாப்சிலிப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த விவரங்கள், அழகிய புகைப்படங்களுடன் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 20 கைதிகள் வரை அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதியாக வந்து, விடுதலையாகிச் சென்ற பலரும் தற்போது தொழில் முனைவோராக வலம் வருவதாக சிறைத் துறையினர் தெரிவித்தனர். சிறை கண்காணிப்பாளர் எஸ்.அண்ணாதுரை கூறும்போது, 'சிறைக்கூடங்கள் தவறு செய்தவர் திருந்தி வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும். சிறைக்காவலர்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும், இந்த கிளைச் சிறையை முன் மாதிரியாக மாற்றியுள்ளோம்.

பல வகையான மூலிகைத் தோட்டம், தக்காளி, கத்தரி, வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறித் தோட்டம் அமைத்துள்ளதுடன், மா, பலா, கொய்யா, வாழை நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆய்வுமேற்கொண்ட கோவை சரக சிறைத் துறை டிஐஜி இரா.அறிவுடைநம்பி, எங்களது பணிகளைப் பாராட்டி இருமுறை ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு, உடுமலை கிளைச் சிறை முன்மாதிரியாக இருப்பதாக அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த சிறையை முழுமையாக கணினிமயமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன' என்றார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2