சிறப்பு கலைநயமிக்க சுக்ரீஸ்வரர் கோவில்..!

 Monday, January 28, 2019  08:30 PM

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோவில். இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாண்டிய மன்னர்களாலும் சோழர்களாலும் சுக்ரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது.

இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220-ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது. இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன.

1952-ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

Vanavil NEw2

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது. இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று கூறப்படுகிறது.

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் மரு உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்து சாப்பிட்டால் மருக்கள் மறைந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனால் ஈசனை மக்கள் மிளகீசன் என்று அழைக்கின்றனர்.

இங்கு உள்ள கல்வெட்டில் இவ்விறைவன் ஆளுடைய பிள்ளை என்று குறிக்கப்படுகிறார். இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்ததால் ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினாராம். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

பின்னர் தாம் செய்தது தவறு என்று உணர்ந்த விவசாயி, தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோவிலை காண வேண்டும் என்று தோணுகிறதா வாருங்கள் திருப்பூர் அருகே உள்ள ஊத்துகுளிக்கு.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2