அரிசி ஓவியத்தில் அசத்தும் கோவை மாணவி - மதுராந்தகி

 Friday, January 25, 2019  08:30 PM

தானியத்தைத் தன் திறமையை வெளிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்திவருகிறார் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி மதுராந்தகி.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் – ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுராந்தகி. பெற்றோர் இருவரும் ஓவியர்கள் என்பதால் தவழும் வயதிலேயே மகளுக்குத் தலைவர்களின் படங்களைக் காண்பித்து, அவர்களது பெயரைச் சொல்லிக்கொடுத்தனர். தாலாட்டுக்குப் பதிலாகத் திருக்குறளைக் கற்றுக்கொடுத்தனர். மதுராந்தகியும் திருக்குறள்களை மனத்தில் வாங்கி, திரும்பக் கூறியுள்ளார்.

தற்போது ப்ளஸ் 2 படித்துவரும் இவர், ஐந்தாம் வகுப்பு படித்தபோதே ஆயில் பெயின்டிங் வரையத் தொடங்கிவிட்டார். 2010-ல் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, 11, 000 அரிசியைக் கொண்டு திருவள்ளுவர் படத்தை உருவாக்கி, அந்த அரிசியின் மீது திருக்குறள்களை எழுதினார். பிறகு அரிசி ஓவியங்களில் கவனம் செலுத்திய மதுராந்தகி, 2011-ல் 5 ஆயிரம் அரிசிகளைக் கொண்டு காமராஜரின் உருவத்தை வரைந்து, அந்த அரிசிகளின் மீது ‘கல்வி கரையில’ என எழுதினார்.

அதேபோல, 7,500 அரிசிகளில் மகாத்மா காந்தியின் உருவத்தை வரைந்து, அதில் ‘ஜெய்ஹிந்த்’ எனவும் எழுதியுள்ளார். மாணவர்களிடையே தலைவர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், விவேகானந்தர், சர்தார் வல்லபபாய்படேல் ஆகியோரின் படங்களையும் வரைந்து அவற்றைப் பல்வேறு பள்ளிகளில் காட்சிப்படுத்தியுள்ளார்.


Vanavil New1
குவியும் விருதுகள்

2015-ல் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, 2 லட்சம் அரிசிகளைக் கொண்டு குழந்தையின் வாயில் போலியோ சொட்டுமருந்து விடுவதுபோன்ற ஓவியத்தை உருவாக்கினார். அது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் பதிவாகியுள்ளது.

2006-ல் மதுராந்தகியின் திறமை குறித்து அறிந்த ஜனாதிபதி அப்துல்கலாம், கோவையில் தன்னை வரவழைத்துப் பாராட்டியதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் மதுராந்தகி. இவருக்கு 2016-ல் தமிழக அரசின் கலை இளமணி விருது வழங்கப்பட்டது. 2017-ல்

அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்களுக்கான விருது கிடைத்தது. இரண்டு வயது முதலே ஞானக்குழந்தை உள்ளிட்ட விருதுகளும், பட்டங்களும் மதுராந்தகியைத் தேடிவந்துள்ளன. படிப்பிலும் இவர் படுசுட்டி. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது தனது ஆசை எனச் சொல்கிறார். “ஏழை மக்களுக்கு உதவ வேண்டுமெனில், அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் இப்போதிருந்தே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிவருகிறேன்.

லஞ்சத்துக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தும் ஓவியங்களையும் வரைந்துவருகிறேன்” என்று சொல்லும் மதுராந்தகி முன்பு செஸ் விளையாட்டில் தேசிய அளவில் 120-வது இடத்தில் இருந்தார். தற்போது பொதுத் தேர்வுக்குத் தயாராகிவருவதால் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்று சொல்லும் மதுராந்தகிக்கு அண்மையில் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் ‘விஷன் 2020’ விருது வழங்கப்பட்டது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2