கோடரிகளால் வீழ்த்தப்படும் கோ(கா)யம்புத்தூர்.

 Friday, January 11, 2019  04:32 PM

ஒருகாலத்தில், “நீலமலை தென்றலிலே தவழ்ந்து வந்த கோவை மாநகரம்” தற்போது வெப்பத்தில் தத்தளிக்கிறது. நகர்புற விஸ்தரிப்புக்காகவும், சாலை விரிவாக்கத்திற்காகவும் பலி கொடுக்கப்பட்டது வெறும் மரங்கள் அல்ல. அது, கோவை மக்களின் பிராணவாயு. நகரத்தை அழகுபடுத்துவதற்கு விலையாக மூச்சுக்காற்றை கொடுத்துள்ளனர், சுற்றுச் சூழல் குறித்து கவலை கொள்ளாதவர்கள். இவர்கள், நகரத்தை கான்கிரீட் காடுகளாக்கியதோடு, தற்போது வனங்களின் வளத்தையும் வேட்டையாட துவங்கியுள்ளனர்.

2004ம் ஆண்டு முதல் தற்போதுவரை சுமார் 5000த்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. ஒருபுறம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என பிரச்சாரம் செய்யும் அரசின் துணை கொண்டே இந்த மரங்களை வெட்டி தீர்த்தது விந்தையிலும் விந்தை. எத்தனையோ சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து போராடியும், கொண்ட கொள்கையில் உறுதியாய் மரங்களை வெட்டி நகரத்தின் நிறத்தையே மாற்றி அமைத்து வருகிறது ஒரு கும்பல்.

கோவை – மேட்டுப்பாளையம் சாலை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. மிகவும் திடமானதாக இருந்தபோதும் அந்த பழைய சாலையை இடித்து (பழைய சாலையை இடிக்க முடியாத அளவில் மிகவும் பலமாக இருந்ததும், ரோட்டை இடிக்கும் இயந்திரத்தின் முனைகள் பலமுறை முறிந்ததும், இதை சமாளிக்க முடியாமல் நெடுஞ்சாலை துறையினர் படாதபாடு பட்டதும் தனிக்கதை) புதிதாக நான்குவழி சாலை அமைப்பதாக கூறி சாலையின் இருபுறமும் இருந்த மரங்களை வெட்டி வீழ்த்தியது அதிகார வர்க்கம்.

கோவை – மேட்டுபாளையம் சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 20 மரங்கள் என்கிற அளவில் காந்திபார்க் துவங்கி நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 20 கிலோமீட்டர் தூரத்தில் மட்டும் சுமார் 400 மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன. புளியமரம், ஆலமரம், வேம்பு, வாகைமரம் உட்பட பலவிதமான மரங்கள் இதில் அடக்கம். மேலும் நான்கு வழிசாலை அமைக்க மேட்டுபாளையம் சாலையில் மட்டும் சுமார் ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த மரங்களை வெட்டியதால் அவற்றில் தங்கியிருந்த பல பறவையினங்கள் காணாமல் போயின. குறிப்பாக பழந்திண்ணி வௌவால், குயில் மற்றும் பல அரிய பறவையினங்கள் கோவை நகரைவிட்டே முற்றிலுமாக கோடரிகளால் விரட்டப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் சாலை மட்டுமல்லாது, அவினாசி சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது. மரங்களை வெட்டியது சாலை விரிவாக்கத்திற்காக என ஊரக வளர்ச்சித்துறையும் நெடுஞ்சாலை துறையும் சப்பைக்கட்டு கட்டியது. ஆனால், இன்றுவரை சாலை விரிவடையவே இல்லை. மேலும் அவினாசி சாலையில் இப்போதும் அதே போக்குவரத்து நெரிசலுடன் தான் உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம், முன்பெல்லாம் இந்த நெரிசலில் பயணிப்போர் மரநிழலில் இளைப்பாறலாம், ஆனால் தற்போதைய நிலை? இளைப்பாற இடமின்றி மண்டை காய்ந்தபடி பயணத்தை தொடரவேண்டியது தான். இந்த நிலையை நகரின் முக்கிய பகுதியின் வளர்சிக்காகதானே என அரைமனதோடு தாங்கிகொண்டாலும் நகரிலிருந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று முடியும் சாலைகளில் இருந்த மரங்களையும் கூட விட்டுவைக்கவில்லை நெடுஞ்சாலை துறையின் கோடரிகள். இப்படியே, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, தடாகம் சாலை, தொண்டாமுத்தூர் சாலை, திருச்சி சாலை என கோவை நகரின் சுவாசமாக இருந்த மரங்களை எல்லாம் தேடித்தேடி வெட்டி தீர்த்தது நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் கோடரிகள்.

கடந்த பத்தாண்டுகளில் இவர்களது கோடரிகளால் நகரப்பகுதிக்குள் மட்டும் கவனிக்கத்தக்கதான 5,000 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுள்ளது. மற்றொருபுறம் கோவை மாநகராட்சியின் கோடரிகளின் கூறிய முனைகளால் சாகடிக்கப்படும் மரங்களும் அதிக அளவில் இருந்துவருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் எந்தகட்சியாக இருந்தாலும் மரம் வெட்டும் கொள்கையில் மட்டும் பாரபட்சமேதுமில்லை. நகரில் பூங்காக்கள் அமைப்பதாக ஒருபுறம் விளம்பரம் செய்துவிட்டு, நகரத்தை விஸ்தரிப்பதாக கூறி நகரின் மத்தியில் இருக்கும் ஏராளமான மரங்களை வெட்டிவருகிறது மாநகராட்சி நிர்வாகத்தின் கோடரிகள் . வெட்டப்படும் மரங்களை ஏலத்தில் எடுத்து பணம் பார்க்கும் ஒப்பந்ததாரர்களின் தொழில் போட்டியும், இந்த போட்டியை காசாக்க நினைக்கும் அதிகாரிகளின் தேவைகளுக்காக தேவையில்லாமல் பல மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. எல்லாம் தெரிந்தும் எத்தனை சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியும் மரம் வெட்ட முனைப்போடு செயல்பட்டதற்கு இந்த கொள்ளை லாபம்தான் காரணமாகவும் உள்ளது.

இது குறித்து ‘ஒளி விழிப்புணர்வு’ இயக்க தலைவர் கற்பகம் அளித்த தகவல்.

yt_middle

“கோவை ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்காக சாலைகளில் இருக்கும் மரங்களை தனியார் சிலர் வெட்டுவதை நேரில் சென்று தடுத்துவந்தோம். அப்போது மரங்களை வெட்ட மாநகராட்சியில் அனுமதி வாங்கியதாக கூறிவந்தனர். இருந்தபோதும் மாநகராட்சியில் முறையான அனுமதி பெறாமல் ஒரு சில அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி மரங்களை வெட்டுவது தெரியவந்தது. மேலும் மரம் வெட்டுவதை எதிர்க்காமல் இருக்க பணம் கொடுப்பதாகவும் பேரம் பேச முயற்சித்தனர். இதனாலேயே இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது எங்களுக்கு உறுதியானது. இதை தொடர்ந்து மரம் வெட்டுவோர் மீது காவல்துறையில் புகார் அளித்தேன் ஆனால் கடந்த நான்காண்டுகளில் நான் கொடுத்த 12 புகார்கள் தற்போதுவரை எப்.ஐ. ஆர் கூட எழுதப்படாமல் உள்ளது. மேலும் மரங்களை வெட்டும் தனியாரிடம் சமூக ஆர்வலர்களின் போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மரங்கள் பாதுகாப்பு குழுவை அமைத்து அதில் 5 சமூக ஆர்வலர்களையும் நியமித்தார். இந்த குழு தற்போதுவரை ஒரு காகித ஆணையாக மட்டுமே உள்ளது எந்த செயல்பாடும் இல்லை. மேலும், மரம் வெட்ட வருபவர்கள் அதற்கு மாற்றாக மாநகராட்சியில் அதிக மரங்களை புதிதாக நடுவோம் என உறுதி அளித்து செல்கின்றனர். ஆனால் அதுவும் செயல்படுத்தபடுவதில்லை. நம் அடுத்த தலைமுறையினருக்காக விட்டுச்செல்ல நிழல்தேவை என்றால், கோவை மரங்களற்ற மாநகராட்சியாக மாறும் அபாயத்தை தமிழக அரசு முன்வந்து தடுக்கவேண்டும்.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் கற்பகம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நகரில் இருந்த மரங்களை நெடுஞ்சாலை துறை, நகரப்புற வளர்ச்சித்துறை, மாநகராட்சி, அதிகாரம் உள்ள தனிநபர் உள்பட இவர்களுடைய கோடரிகளுக்கு நகருக்குள் மரம் இல்லாமல் போய்விட்டன. எனவே வனத்துறை மற்றும் சமூக விரோதிகளோடு கைகோர்த்து தற்போது கோவையின் வனங்களை குறிவைத்து மரங்களை அழிக்க புறப்பட்டுள்ளன.

இந்த அவலநிலை குறித்து, ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நட்டவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோவையை சேர்ந்த யோகநாதன் நமக்களித்த அதிர்ச்சி தகவல் -

“கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ‘குணுகுமடுவு’ எனும் இடத்தில் ரகசியமான முறையில் மரங்கள் வெட்டியெடுத்து செல்லப்படுவது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்ததில் காட்டாறுகளில் அடித்து வரப்படும் மரங்களை தாசில்தாரின் அனுமதியுடன் எடுத்து செல்வதாக தெரிவித்தனர். அதில் 40டன் அளவு மரங்களை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் 100டன் அளவில் மரங்களை எடுத்து சென்றுள்ளனர். மரங்களை எடுத்து செல்ல வட்டாட்சியருக்கு எப்படி அதிகாரம் உள்ளது என்ற கேள்வி நமக்கு எழுகிறது!. இது போன்ற செயல்களால் வனவிலங்குகள் நகருக்குள் புகுந்து விடுகின்றன. விளைவு, கடந்த சில ஆண்டுகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் கோவைக்கு பேரழிவு உண்டாகும் அபாயம் உள்ளது” என்கிறார்.

வளர்ச்சியடைந்த,புல் பூண்டற்ற ஒரு நகரம் நரகத்திற்கு சமம். சுவாசிக்க பிராணவாயு தேவையென்றால் மரங்களை வெட்டுவதை நிறுத்தவேண்டும். எதையாவது வெட்டியாக வேண்டுமென்றால் இந்த கோடரிகளை வெட்டி போடுங்கள்

ஏற்கனவே, ரியல் எஸ்டேட் அமைப்பதற்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில். நகரில் புதிய கட்டிடங்கள் கட்டும் தனியார் தங்களது சுயலாபத்திற்காக, சாலையில் இருக்கும் மரங்களை வெட்டுவது தொடர்ந்து வருகிறது. சுற்றுபுறசூழல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மரங்களை வெட்டும் தனியாரை தடுத்து வந்தாலும் ரகசியமான முறையில் மரங்களின் வேருக்குள் சல்பூரிக் ஆசிட் செலுத்தி மரத்தை பட்டுப்போக செய்து கிளை கிளையாக வெட்டி கடைசியில் மரம் இருந்ததற்கான அடையாளத்தையே அழித்துவிடுகின்றனர். பெண்கள் மீது திராவகம் வீசுவதை தடுக்க கட்டுப்பாடு தேவை என கூறும் உச்சநீதிமன்றம் மரங்களை அழிக்க பயன்படுத்தும் அமிலங்கள் விற்பனையின் போதும் தீர விசாரித்து கொடுக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த வருடங்களில் கோவையின் தட்பவெட்பநிலை குளிர்ச்சியாக இருந்தது. தற்போதைய நிலை குறித்து வானிலை ஆராய்வு மையத்தின் உதவியை நாடியபோது நமக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் இதோ. இருக்கும் ஒரே சூரியன் ஆனால் பருவநிலை மட்டும் எப்படி இடம் மாறுகிறது என்றால் புவி வெப்பமயமாவதற்க்கு மரங்களின் அழிவு மிக முக்கிய காரணம் கோவை மரங்களின் அழிவு காரணமாக இயற்கையிலேயே குளிர்ச்சியான சூழலை கோவை இழந்து வெப்பமடைந்து வருகிறது. இயற்கையை அளவிடும் போது 10ஆண்டுகளை ஒரு டிகேட் என கணக்கிட்டு கொல்வதுவழக்கம் அப்படி 3 டிகேட் (30 வருடங்கள்) முன்பு தென்னிந்தியாவின் அதிக வெப்பமுள்ள பகுதியாக வேலூர் இருந்துள்ளது. தற்போதைய ஆய்வின்படி கேரளா மாநிலம் பாலக்காடு என்கிறது. பாலக்காடு கேரளாவை சேர்ந்ததாக இருந்தாலும் கோவை நகரத்தை நெருங்கியதாகவே இருக்கிறது. இந்த பாலகாடுக்கும் கோவைக்கும் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் என்கிறபோது கோவையின் வெப்பநிலை அதிகரிக்கும் நாள் தொலைவில் இல்லை .


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
mobile_App_right
Insta_right
fb_right
Twitter_Right