வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: கோவை பெண் கைது

 Thursday, December 6, 2018  09:18 PM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.80 லட்சம் வசூலித்து மோசடி செய்த பெண்ணை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

கோவை, ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த நாகம்மை, அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் வித்யஸ்ரீ என்பவர் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர்கள் மூவரும் சேர்ந்து அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்துள்ளனர்.


Vanavil NEw2
இந்த விளம்பரத்தை நம்பி திருப்பூர் சிறுபூலுவம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் மெர்லின்ஜோன்ஸ் என்பவர் பிரபாகரனைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, முதல் தவணையாக ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என பிரபாகரன் கூறினார். இதை நம்பிய மெர்லின் ஜோன்ஸின் கடவுச்சீட்டையும் பிரபாகரன் வாங்கி வைத்துக் கொண்டார்.

பின்னர், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ரூ.3.54 லட்சம் பணத்தை மெர்லின்ஜோன்ஸிடம் இருந்து பிரபாகரன் வாங்கினார். அதன்பின்னர், வெளிநாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்தது போல் போலி ஆவணம் ஒன்றைத் தயார் செய்த பிரபாகரன், அந்த ஆவணத்தை மெர்லின் ஜோன்ஸிடம் கொடுத்துள்ளார்.

அந்த ஆவணம் போலியானது என்பதைத் தெரிந்து கொண்ட மெர்லின் ஜோன்ஸ், தனது கடவுச்சீட்டு மற்றும் பணத்தை திருப்பித்தரும்படி பிரபாகரனிடம் கேட்டார். ஆனால் அவர் தரவில்லை. மேலும், இதேபோல் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரபாகரன், நாகம்மை, வித்யஸ்ரீ ஆகிய மூவரும் சேர்ந்து தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த அஜித், விஷ்ணு, ஜிதீஷ்குமார் உள்ளிட்ட 23 பேரிடம் மொத்தம் ரூ.80 லட்சம் பணத்தை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நாகம்மையை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகம்மையிடம் இருந்து 18 கடவுச் சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq1
Website Square Vanavil2
SNS_Sq2