கோவையின் வரலாற்றையும் அறிந்து கொள்வது இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இருக்கும் தார்மிகக்கடமை;

 Tuesday, December 4, 2018  04:33 PM

பிறந்து வளர்ந்தும் இந்த நகரின் சரித்திரம் அறியாதவர்களுக்கும், எங்கோ பிறந்து இங்கே வந்து குடியேறியவர்களுக்காகவும் இதோ! கோவையின் வரலாற்றுச் சுருக்கம்...

வரலாறு என்பது கடந்த காலம் உறைந்து கிடக்கும் பெட்டகம். மனித இனத்தின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும், வாழ்வுக்கும், தாழ்வுக்கும் சான்றாக இருப்பது வரலாறுகள்தான். ஒரு நாட்டின் வரலாறு, ஒரு குடும்பத்துக்கு எழுதப்படும் ஆவணத்தைப் போல உண்மையானதாக இருக்க வேண்டும் என்கிறார் மொழியறிஞர் பாவாணர்.

பழந்தமிழ் இலக்கியங்களையும், தமிழகத்தின் தொன்மையான வரலாற்றையும் பல்லாண்டுகள் ஆய்வு செய்து 1929 ல் முதன் முதலாக தமிழக வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர் பி.டி சீனிவாச ஐயங்கார். அவர் தனது நூலில் தமிழர்கள்தான் இந்தியாவின் மூத்தகுடிகள் என்கிறார்.

இந்தியாவின் வரலாறு வடக்கில் இருந்து எழுதப்பட கூடாது; தென்முனையில் இருந்து எழுதப்பட வேண்டும்; அதுவே உண்மையான வரலாறாக அமையும் என்னும் மனோன்மணீயம் சுந்தரனாரின் கருத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஸ்மித் ஏற்றுக்கொள்கிறார். கொங்கு நாட்டைப் புறக்கணித்துவிட்டு தமிழக வரலாறை எழுத முடியாது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.

கொங்கு மண்ணின் வரலாற்றை எழுதியவர்களில், முதன்மையானவர் கோவைக்கிழார் என்றழைக்கப்படும் சி.ம.ராமச்சந்திரன் செட்டியார். 'இதுவோ எங்கள் கோவை' 'இதுவோ எங்கள் நாட்டுப்புறம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியதன் வாயிலாக கோவை வரலாற்றை சிறப்பாக ஆவணப்படுத்தியவர் இவர்.

'கொங்கு தமிழக வரலாறு' எழுதிய கா.அப்பாத்துரை, 'கொங்கு நாட்டு வரலாறு<; துளு நாட்டு வரலாறு' நூலை எழுதிய மயிலை சீனி வேங்கடசாமி, பூளைமேடு வரலாறு எழுதிய அ.கி. நாயுடு, கொங்கு நாட்டு கல்வெட்டுகள் பற்றி எழுதிய ஆய்வறிஞர் ராசு, சூலூர் வரலாற்றை எழுதிய செந்தலை கவுதமன், சமகால வரலாற்றை பதிவு செய்துள்ள கவியன்பன் பாபு, சி.ஆர். இளங்கோவன், பா. மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் கோவை வரலாறை எழுதியதில் குறிப்பிடத் தக்கவர்கள்.

Vanavil NEw2

கொங்கு நாட்டின் வரலாற்றை முதன் முதலில் எழுதிய அ.தி.முத்துசாமி கோனார், பொதுவான வரலாற்று பார்வையிலிருந்து வேறுபட்டு 'கொங்கு நாடு தனி நாடு' என்கிறார். இன்றைய கோவை, கொங்கு நாட்டின் ஐந்தில் ஒரு பகுதிதான். கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, கரூர்,தர்மபுரி ஆகிய மாவட்டங்களும், மைசூர் தலைக்காடு, திருச்சி குளித்தலையையும் உள்ளடக்கியதுதான் கொங்குநாடு.

மேற்கே வெள்ளியங்கிரி மலை (மேற்கு தொடர்ச்சி மலை) வடக்கே தலைக்காடு (கோபி) தெற்கே வாகையூர் (பழனி) ஆகியவை கொங்கு நாட்டின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டன. கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய பேரூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து பேரூர் நாடு என்று அழைக்கப்பட்டது.
இதில், ஒரு கிராமமாக இருந்ததுதான் இன்றைய கோவை. கோவன் என்ற இருளர் தலைவனின் ஆளுகையின் கீழ் இந்நிலப்பகுதி இருந்ததால் கோவன்பதி என்றும், கோவன்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயர் திரிந்து கோயமுத்துர் ஆனது. பேரூர் நாட்டை கேக்கண்டன் ரவி என்ற சேர மன்னன் ஆண்ட போது, மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் கொங்கு நாட்டை வென்று பேரூர் நாட்டையும் கைப்பற்றினான்.

பின்னர் தலைக்காட்டுக் கங்கர்கள் கைப்பற்றினர். கி.பி., 7 ம் நூற்றாண்டுக்கு பிறகு கங்கர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சோழர்கள், கொங்கு சோழர்கள் என அழைக்கப்பட்டனர். கி.பி., 13 ம் நூற்றாண்டுக்கு பிறகு கொங்கு நாடு பாண்டியர்களின் வசமானது. சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு பின் ஒய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனரும், மைசூரின் கண்டிகர்களும் ஆண்டனர்.

அதன் பின் விஜய நகர பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி., 16 ம் நூற்றாண்டில் கோவை, மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது; 18ம் நூற்றாண்டுக்கு பிறகு பேரூர் நாடு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரால் ஆளப்பட்டது. 1799 ல் நடந்த நான்காம் மைசூர் போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்ட பிறகு கோவை முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தன.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் கோவை சிறப்பான வளர்ச்சியை அடைந்து. 1805 ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு கோவை அதன் தலைநகரமானது. 1866 ல் கோவை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் முதல் தலைவராக மெக்ரிகர் இருந்தார். 1888 ல் ஸ்டேன்ஸ் மில் துவங்கப்பட்டது. 1914 வரை இங்கு 3 மில்கள் மட்டுமே இருந்தன.

கோவை பகுதிகளில் பருத்தி விளைச்சல் அதிகமானதாலும், இங்குள்ள தட்ப வெப்ப நிலை நூற்பாலை தொழிலுக்கு ஏற்றதாகவும் இருந்ததாலும், பைக்காரா மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் அதிகம் கிடைத்ததாலும் பல நூற்பாலைகள் இங்கு தோன்றின. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரம் ஜவுளித்தொழிலில் சிறந்து விளங்குவது போல் கோவை இத்தொழிலில் சிறந்து விளங்கியதால் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என பெயர் பெற்றது கோவை.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2